அந்த நேரத்தில் மகளின் நலனுக்காக கோவிலில் பிரார்த்தனை செய்து கொண்டிருந்த பெற்றோர், பதறித் துடித்து வந்து, கதறி அழுத காட்சி காண்பவர் நெஞ்சை உருக்குவதாக இருந்தது. கர்நாடக மாநிலம் மைசூர் அருகே பதை பதைக்க வைக்கும் இந்த சம்பவம் நடந்துள்ளது. பதனகுப்பை கிராமத்தைச் சேர்ந்தவர், நிங்க ராஜு. அவருடைய மனைவி சுருதி. அவர்களின் ஒரே மகளான தேஜஸ்வினி (வயது 8) அருகில் உள்ள தனியார்பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார்.

வழக்கம்போல் காலையில் பள்ளிக்குச் சென்ற தேஜஸ்வினி, 11 மணி அளவில் வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்தார். பதறிப்போன ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு தூக்கி சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே மாணவி இறந்து விட்டதாக தெரிவித்தனர். ரத்த அழுத்தம் அல்லது மாரடைப்பால் மாணவி தேஜஸ்வினி இறந்திருக்கலாம் என்று டாக்டர்கள் கூறினார்கள்.
இதையும் படிங்க: அனலைக் கிளப்பும் அண்ணா பல்கலை மாணவி விவகாரம்... சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது விவாதம்....

முன்னதாக மாணவி மயங்கி விழுந்ததும், பள்ளி நிர்வாகத்தினர் பெற்றோரின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டனர். ஆனால், உடனடியாக அவர்களுடன் இணைப்பு கிடைக்கவில்லை.
அந்த சமயத்தில் குல்லூர் கிராமத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்று இருந்த அவர்கள், மகளின் நல்வாழ்விற்காக பூஜை செய்து கொண்டிருந்தனர். பூஜைக்கு இடையூறு வரக்கூடாது என்பதற்காக தங்கள் செல்போன்களை அவர்கள் அணைத்து வைத்திருந்தனர்.
இதனால் அவர்களுக்கு தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வருவதற்கு முன்பு பிணமாகத்தான் மகளை பார்க்க முடிந்தது. ஒரே மகளை பறிகொடுத்த பெற்றோர் நெஞ்சில் அடித்தபடி கதறி அழுதது காண்பவரை உருகச் செய்தது.
பெற்றோர் கேட்டுக் கொண்டபடி பிரேத பரிசோதனை செய்யாமல் மாணவியின் உடல் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மாவட்ட கல்வி அதிகாரி அனுமந்தப்பா மற்றும் அதிகாரிகள் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்கள். பள்ளி வளாகமும் மாணவியின் கிராமமும் இதனால் சோகத்தில் மூழ்கியது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஆளுநர் கேஷுவல் லேபர் மட்டுமே..திமுக ஆர்.எஸ்.பாரதி கடும் தாக்கு!