நாட்டின் தலைநகரான டெல்லியில் நடைபெற்ற தேர்தலில், கடந்த இரண்டு முறை தோல்வி அடைந்த பாஜக இந்த முறை ஒரு கௌரவ பிரச்சனையாக எதிர்கொண்டு தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.
ஆளும் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சியும் அவர்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் மும்முரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதால் அங்கு தேர்தல் களம் உச்சகட்ட சூடு பிடித்து வருகிறது. டெல்லி சிறிய அளவிலான யூனியன் பிரதேசம் என்பதால் தெருக்களில் ஆங்காங்கே நடைபெறும் கொடுமைப் பிடி சண்டை போல் அரசியல் கட்சித் தலைவர்கள் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் டெல்லியில் கெஜ்ரிவால் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது, "மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, நாட்டின் குறிப்பிட்ட 400 அல்லது 500 தொழிலதிபர்களுக்கு ஏறத்தாழ 10 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு கடன்களை தள்ளுபடி செய்து இருப்பதாக"௦ குற்றம் சாட்டியிருக்கிறார். இது பற்றி அவர் கூறியதாவது:-
இதையும் படிங்க: 'அரசியலில் இது புதுசு' : "உருவ பொம்மை எரிப்பு"க்குப் பதிலாக, கெஜ்ரிவால் "கட் அவுட்"டை ஆற்றில் மூழ்கடிக்கும் போராட்டம்
"மத்தியில் ஆளும் பாஜக அரசு சுமார் 500 தொழிலதிபர்களின் ரூ.10 லட்சம் கோடி கடன்களை தள்ளுபடி செய்து இருக்கிறது.
ஒருவருக்கு மட்டும் ரூ. 46 ஆயிரம் கோடி இதில் குறிப்பிட்ட ஒரு தொழிலதிபருக்கு ரூ.46,000 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. மற்றொரு தொழிலதிபர் ரூ.6,500 கோடி கடனை திருப்பி செலுத்த வேண்டும். அந்த தொழிலதிபருக்கு ரூ.5,000 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.

நாட்டில் ஏழைகள், நடுத்தர வர்க்க மக்கள் பல்வேறு வகைகளில் அரசுக்கு வரி செலுத்துகின்றனர். ஜிஎஸ்டி வரி விதிப்பு, மக்களின் மீது மிகப்பெரிய சுமையை ஏற்படுத்தி இருக்கிறது.
இவ்வாறு மக்களை சிரமப்படுத்தி பெறப்படும் வரியை மக்கள் நலன்களுக்கு செலவிட வேண்டும். தொழிலதிபர்களின் கடன்களை தள்ளுபடி செய்யக்கூடாது".

இவ்வாறு அர்விந்த் கெஜ்ரிவால் கூறினார். மாறுபட்ட சித்தாந்தங்கள் இடையேயான போர்
அவர் மேலும் கூறுகையில், "டெல்லி வாக்காளர்கள் பொதுமக்களின் நலன் மற்றும் பணக்கார நண்பர்கள் குழுவின் நலனுக்காக பொதுப்பணத்தை சுருட்டும் கட்சி.. இந்த இரண்டில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். வரி செலுத்தும் மக்களின் பணத்தை எப்படி செலவிட வேண்டும் என்பதை இந்த தேர்தல் தீர்மானிக்கிறது.

பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு சித்தாந்தம் தனது நெருங்கிய பணக்கார தொழில் அதிபர் நண்பர்களுக்கு ஆயிரக்கணக்கான கோடி கடன்களை தள்ளுபடி செய்ய பொது நிதியை பயன்படுத்துகிறது.
மற்றொன்று எங்கள் ஆம் ஆத்மி மாதிரி இலவச மின்சாரம், கல்வி வழங்குவதில் கவனம் செலுத்துகிறது. சுகாதாரம் மற்றும் போக்குவரத்தை சாமானியர்கள் பயன் பெரும் விதத்தில் மாற்றி அமைத்துள்ளது.
"இலவசம் இலவசம்" என்று அடிக்கடி பாஜக சொல்லிக் கொண்டிருக்கிறது. ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் கட்டத் தவறிய 500 தொழிலதிபர்களின் 10 லட்சம் கோடி ரூபாய் கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்திருக்கிறது. இது இலவசம் இல்லையா ?.
வாக்காளர்களாகிய நீங்கள் எதை விரும்புகிறீர்கள்?. பள்ளிகளை கட்டி இலவச கல்வியை கொடுக்கும் இலவச மருத்துவத்திற்காக மொஹல்லா கிளினிக்குகளை கட்டும் கட்சியா? அல்லது பணக்காரர்களுக்கு மட்டுமே இலவசங்களை கொடுக்கும் கட்சியா?" என்றும் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: 382 கோடி டெல்லி சுகாதார ஊழலில், கெஜ்ரிவாலுக்கு நேரடி தொடர்பு: காங்கிரஸ் குற்றச்சாட்டு; ஆம் ஆத்மி பதிலடி