திமுக தலைமையிலான திமுக கூட்டணி அரசு தமிழ்நாட்டில் நடந்து வருகிறது. திமுக ஆட்சி பொறுப்பேற்று 4 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் இன்னும் ஒரு ஆண்டு எஞ்சியிருக்கிறது. அதற்குள் தமிழக சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அதிமுக சட்டமன்ற தொகுதி வாரியாக பொறுப்பாளர்களை நியமித்துள்ளது. பூத் கமிட்டி கூட்டமும் நடத்தப்பட்டு வருகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயும் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளார். அதிமுக, பாரதிய ஜனதா கூட்டணி மீண்டும் அமைந்துள்ளது. தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு பரபரப்பான அரசியல் சூழலில் திடீரென தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திடீரென பிரதமர் மோடியை புகழ்ந்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளது கூட்டணிக்கான முயற்சியா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழ் திரையுலகில் கொடிகட்டி பறந்தவர் விஜயகாந்த். சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்ற அவர், கேப்டன் என அன்போடு அழைத்தனர். பின்னர் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டார். அதிலும் வெற்றி பெற்ற அவர் எதிர்க்கட்சித் தலைவராக உயர்ந்தார்.
இதனிடையே அவருக்கு உடல் நல பிரச்சனைகள் ஏற்பட்டது. இதனால் அவர் பொதுநிகழ்ச்சிகளில் அவரது மனைவியின் உதவியுடன் கலந்துக்கொண்டு வந்தார். உடல்நிலை மோசமான நிலையில் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார்.
இதையும் படிங்க: பொன்முடியின் ஆபாச பேச்சு.. முதல்வர் உறுதியான நடவடிக்கை எடுத்துள்ளார்.. பொசுக்குன்னு சொன்ன பிரேமலதா!

அவரது மறைவு தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியது. லட்சக்கணக்கானோர் தேமுதிக அலுவலகம் முன்பு திரண்டு தங்களது அஞ்சலியை செலுத்தினர். ஒருபுறம் மக்கள் செல்வாக்கு அவருக்கு இருந்தது போல் மறுபுறம் பல அரசியல் தலைவர்களுடனும் அவர் நெருக்கமான நட்பை கொண்டிருந்தார்.
அதில் குறிப்பாக பிரதமர் மோடியின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்ட விஜயகாந்த் கன்னத்தை தடவி கொடுத்து கட்டியணைத்து வாழ்த்து பெற்றதை யாராலும் மறக்க முடியாது. இந்த நிலையில் பிரதமர் மோடிக்கும் விஜயகாந்துக்கும் இருந்த உறவு குறித்து தேமுதிக பொது செயலாளரும் விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா விஜயகாந்த் அளித்துள்ள பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.

அவர் பேசுகையில், கேப்டன் விஜயகாந்த் அவர்கள் திரையுலகத்திலும், அரசியலிலும் உயர்ந்த ஒரு ஆளுமை மட்டுமல்ல, பலருடைய அன்பையும் மரியாதையையும் பெற்ற ஒரு மனிதர். பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் அவருக்கு இடையில் இருந்த உறவு, அரசியலைத் தாண்டிய ஒன்று. 'தமிழகத்தின் சிங்கம்' என்று அன்பாக அழைப்பதோடு, அவரது உடல்நலக் குறைபாடுகள் போது ஒரு சகோதரரைப் போல கவலைப்பட்டு, அடிக்கடி தொடர்பு கொள்வார்.
அவர்களுடைய நட்பு பரஸ்பர மரியாதையிலும் அன்பிலும் கட்டப்பட்ட, மிகவும் அரிதான ஒன்று என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த பேட்டியை தனது எக்ஸ் தளத்திலும் அவர் பகிர்ந்துள்ளார். தற்போது பாஜக அதிமுக கூட்டணி அமைந்திருக்கும் நிலையில் பிரேமலதா விஜயகாந்த் பிரதமர் மோடியை திடீரென புகழ்ந்தது வீடியோ பதிவிட்டதால் தேமுதிகவும் பாஜக கூட்டனியில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: புதிய பாம்பன் பாலத்துக்கு அப்துல் கலாம் பெயர் ஏன் வைக்கக் கூடாது.? மாஸ் ஐடியா கொடுத்த பிரேமலதா!!