தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரில் துறைசார்ந்த மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. முன்னதாக நடைபெற்ற வினாவிடை நேரத்தில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர்கள் அளித்த பதில்களின் தொகுப்பு வருமாறு...
அங்கன்வாடியில் உள்ள காலிப்பணியிடங்கள் ஒரே மாதத்தில் நியமிக்கப்படும் என்று கேள்வி ஒன்றுக்கு அமைச்சர் கீதாஜீவன் பதிலளித்தார். அங்கன்வாடி பணியாளர்களை நியமிக்க ஏற்கனவே அரசாணை வெளியிடப்பட்டு விட்டதால் இன்னும் ஒரே மாதத்தில் நியமனங்கள் நடைபெறும் என்று அவர் கூறினார். 7,900 அங்கன்வாடி பணியாளர்கள், 8,900 சத்துணவு சமையல் ஊழியர்கள் ஒரே மாதத்தில் நியமிக்கப்படுவார்கள் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.

அதிக நெடுஞ்சாலைகள் இருக்கும் பகுதிகளில் உள்ள கோட்டங்களை பிரிப்பது குறித்து அதிமுக உறுப்பினர் கடம்பூர் ராஜு எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் எ.வ.வேலு பதில் அளித்தார். தூத்துக்குடியை இரண்டு கோட்டங்களாக பிரிப்பது பற்றி முதலமைச்சருடன் ஆலோசித்து வருவதாக கூறிய அவர், தூத்துக்குடி மட்டுமின்றி புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய கோட்டங்களையும் இரண்டாக பிரிப்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது என்றார்.
இதையும் படிங்க: மீண்டும் ஒரு வேங்கைவயல்? அங்கன்வாடி மையத்தின் முன் மனிதகழிவு.. மதுபாட்டில்களை உடைத்து போட்டு அராஜகம்..

கோவில்பட்டியை தலைமையிடமாகக் கொண்டு புதிய நெடுஞ்சாலைக் கோட்டம் அமைப்பது குறித்து இந்தாண்டே அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் பதிலளித்தார். வேட்டைவலம் புறவழிச்சாலைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நில எடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அவர் கூறினார். நில எடுப்பு முடிந்தவுடன் பணி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று எ.வ.வேலு தெரிவித்தார். கடும் போக்குவரத்து நெரில் ஏற்படுவதால் மாநில நிதியில் இருந்து பல்லடத்தில் புறவழிச்சாலை அமைக்கப்படுமா என அதிமுக உறுப்பினர் கேள்விக்கு இந்தவாரத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்தி ஆய்வு செய்யப்படும் என்றும் மீதம் உள்ள ரவுண்டானாவை அமைக்கும் பணியை அரசு மேற்கொள்ளும் என்றும் அவர் கூறினார்.

பெருந்துறை தொகுதியில் 8 பேரூராட்சிகள் இருப்பதால் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித் தரப்படுமா என எம்எல்ஏ ஜெயக்குமார் கோரிக்கை விடுத்தார். ஒரே வீட்டில் 4, 5 குடும்பங்கள் வசிப்பதால் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் முத்துசாமி, அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட தயக்கம் இல்லை, நிலம் எடுப்பதில் தான் சிக்கல் உள்ளது என்றார். வாரியத்தின் மூலம் நிலம் குறித்து ஆய்வு செய்து அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் பதிலளித்தார்.
இதையும் படிங்க: நீலகிரி மருத்துவத்துறையில் காலி பணியிடங்களே இல்லை' - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்..!