நாடாளுமன்ற மக்களவையில் காங்கிரஸ் எம்.பி., மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு தொடர்ந்து பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து, காங்கிரஸ் எம்.பி.க்கள் அனைவரும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை இன்று கூட்டாகச் சந்தித்து முறையிட்டனர்.
காங்கிரஸ் எம்.பி.யும் மக்களவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் கவுரவ் கோகய், பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், கொறடா மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட 70 எம்.பி.க்கள் மக்களவை சபாநாயகரை நேரில் சந்தித்து ஏன் ராகுல் காந்திக்கு பேசுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது எனும் விவகாரத்தை எழுப்பினர்.

இதற்கிடையே மக்களவை நடக்கும் போது, ராகுல் காந்தி எழுந்து பேச முற்பட்டபோது, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா “அவையின் நடைமுறைகளை, மாண்பை அறிந்து உறுப்பினர்கள் நடப்பார்கள் என எதிர்பார்க்கிறேன். உறுப்பினர்கள் அனைவரும் உயர்ந்த மரியாதையுடன் நடந்து, கண்ணியத்தைக் காக்க வேண்டும்.
இதையும் படிங்க: பாஜகவை அடிச்சே ஆகணும்... இதுமட்டும்தான் வழி... இந்துத்துவாவுக்கு எதிராக ராகுல் எடுத்த அஸ்திரம்..!
பல்வேறு சம்பவங்கள் என் பார்வைக்கு கொண்டு வரப்பட்டன, அதில் உறுப்பினர்களின் நடத்தை உயர்ந்த தரத்தில் இல்லை. இந்த அவையில் தந்தை, மகள், தாய் மற்றும் மகள், கணவன், மற்றும் மனைவி ஆகியோர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.
ஆதலால், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் அவையில் உறுப்பினர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகளைக் கையாளும் விதி 349 படி நடந்து கொள்வார் என்று நான் எதிர்பார்க்கிறேன். குறிப்பாக, எதிர்க்கட்சித் தலைவர் விதிகளின்படி நடக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

ராகுல் காந்தி எழுந்து பேச முற்பட்டபோது, அவையை ஒத்திவைத்து ஓம்பிர்லா புறப்பட்டார். அதன்பின் மக்களவைக்கு வெளியே ராகுல் காந்தி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் “ மக்களவை ஜனநாயகமற்ற முறையில் நடக்கிறது. என்னைப் பற்றி ஆதாரமற்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டு எனக்கு பேச அனுமதியளிக்கவில்லை. அவையில் என்னை பேச அனுமதிக்காமல் இருப்பது அவையை சரியாக நடத்தும் வழிமுறை அல்ல.
என்ன நடக்கிறது என்பது எனக்குத் தெரியவில்லை. நான் பேச முற்படும்போது, அவைத் தலைவர் எழுந்து ஓடிவிடுகிறார். இப்படியெல்லாம் அவையை நடத்த முடியாது. அவையை ஒத்திவைக்க இப்போது அவசியமில்லை.

நான் பேசுவதற்கு எப்போது எழுந்தாலும் பேச அனுமதிக்கப்படுவதில்லை. நாங்கள் ஏதாவது கூற முயன்றாலும் அனுமதியில்லை. நான் ஏதும் செய்யவில்லை, அமைதியாக அமர்ந்திருக்கிறேன். ஒருவார்த்தைகூட பேசவில்லை. கடந்த 7 முதல் 8 நாட்களாக பேச எனக்கு அனுமதிதரவில்லை.
மத்திய அரசு எதிர்க்கட்சிகளை கையாளும் ஒருபுதிய உத்தியாக இருக்கிறது, எதிர்க்கட்சி குரலே இல்லாமல் செய்வதாகும். பிரதமர் மோடி கும்பமேளா குறித்து பேசினார், அப்போது நான் சிலவற்றை சேர்த்தேன், அதாவது வேலையின்மையை குறிப்பிட்டேன்.அதனால், எனக்கு பேச அனுமதியில்லை. சபாநாயகர் அனுமுறை எப்படி இருக்கிறது என்பது எனக்குத் தெரியவில்லை” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சாதிவாரி கணக்கெடுப்பு நிச்சயம் நடக்கும்.. தெலங்கானாவை புகழ்ந்த ராகுல்..!