காங்கிரஸ் கட்சியின் புதிய அலுவலகம் டெல்லியில் 9ஏ கோட்லா சாலையில் அமைந்துள்ளது. இதற்கு முன் இருந்த பழைய அலுவலகம் 24 அக்பர் சாலையில் அமைந்திருந்தது.
ஏறக்குறைய 50 ஆண்டுகள் 24 அக்பர் சாலையில் இருந்த அலுவலகத்தி்ல் கட்சியை நடத்திய காங்கிரஸ் கட்சி அங்கிருந்து இடம் பெயர்ந்து சொந்த அலுவலகத்துக்கு வந்துள்ளது.
காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர்கள் பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பலர் இன்று இந்த திறப்புவிழா நிகழ்ச்சியில் பங்கேற்றனர். காங்கிரஸ் கட்சியின் புதிய அலுவலகத்தில் கட்சியின் கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதமும், வந்தே மாதரம் பாடலும் பாடப்பட்டது.

சோனியா காந்தி கட்டிடத்தின் ரிப்பனை வெட்டி திறக்கும முன், தன்னுடன் சேர்ந்து தலைவர் கார்கேவும் ரிப்பன் வெட்ட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இந்த புதிய அலுவலகம் குறித்து பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறுகையில் “ சோனியா காந்தி தலைவராக இருந்தபோது இந்த அலுவலகம் கட்ட அடிக்கல்நாட்டப்பட்டு இப்போது முடிக்கப்பட்டது. புதியவற்றை தொடங்கும்முன், புதிய இடத்துக்கு வந்துள்ளோம். கட்சியின் தேவை, தலைவர்களின் தேவை ஆகியவற்றை சமாளிக்கும் வகையில் புதிய அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. நவீன வசதிகள், கட்சி ஆலோசனைகள், கூட்டங்கள் நடத்தவும் வசதிகள் உள்ளன” எனத் தெரிவித்தார்.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பாக பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கால் 2009ம் ஆண்டு டிசம்பரில் புதிய கட்சி அலுவலகத்துக்கு 9ஏ கோட்லா சாலையில் அடிக்கல் நாட்டப்பட்டது. ஏறக்குறைய 15 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் படிப்படியாக கட்டப்பட்டு முடிக்கப்பட்டு திறக்கப்பட்டது.
இதையும் படிங்க: மன்மோகன் சிங் இறப்பில் அரசியல் ஆதாயம்... சீக்கியர்களிடம் சிண்டு முடியும் காங்கிரஸ்..? இறுமாப்புக்காட்டி இணங்கி வந்த பாஜக..!
நிதிப் பற்றாக்குறை, மத்தியில் ஆட்சியை இழந்தது ஆகியவற்றால் காங்கிரஸ் கட்சியால் விரைவாக அலுவலகத்தை கட்டிமுடிக்க முடியவில்லை என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் கட்சிக்கு முன்பு இருந்த அக்பர் சாலை அலுவலகம், ஒரு காலத்தில் ஆங்கிலேயர் ஆட்சியில் வைஸ்ராயாக இருந்த லிங்தோவின் நிர்வாகக் குழுவில் உறுப்பினராக இருந்த சர் ரெஜிநால்ட் மேக்ஸ்வெல் இல்லமாகவும், அதன்பின் 1961ல் இந்தியாவுக்கான மியான்மர் தூதர் இல்லமாக இருந்தது. மியான்மர் அதிபராக இருந்த ஆங் சான் சுகியின் தாயார் அப்போது இந்தியாவின் தூதராக இருந்தார், இங்குதான் ஆங் சான் சுகி வளர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1980ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தது, இந்திரா காந்தி சுட்டுக் கொலை, ராஜீவ் காந்தி பிரதமராக 1984ம் ஆண்டு பதவி ஏற்றது, பின்னர் காங்கிரஸ் கட்சி தேர்தலில் தோற்றது, பி.வி. நரசிம்மராவ் ஆட்சிக் காலம், மீண்டும் காங்கிரஸ் கட்சியின் சரிவு, சோனியா காந்தியின் அரசியல் பிரவேசம், அவரின் தலைமை, காங்கிரஸின் 10 ஆண்டுகால ஆட்சி, அதன் ஏற்பட்ட ஏற்ற, இறக்கங்கள் என அனைத்தையும் அக்பர் சாலையில் அமைந்துள்ள இந்த அலுவலகம் கண்டுள்ளது. அக்பர் சாலையில் உள்ள அலுவலகத்துக்கு கடந்த 1978ம் ஆண்டு இந்திரா காந்தி காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தை மாற்றினார்.
அவசரகாலத்துக்குப்பின் காங்கிரஸ் கட்சி தேர்தலில் படுதோல்வி அடைந்தநிலையில் இந்த அலுவலகத்துக்கு காங்கிரஸ் கட்சி சென்றது. காங்கிரஸ் கட்சி இரு பிரிவாக பிரிந்து இந்திரா குழுவாக இருந்தபோது அதற்கான அலுவலகம் இல்லை.

அப்போது எம்.பி. கடாம் வெங்கிடசாமி தனது இல்லத்தை அதாவது 24, அக்பர் சாலையில் உள்ள தனது இல்லத்தை காங்கிரஸ் கட்சிக்கு அலுவலகமாக மாற்ற வழங்கினார். 1969ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி இரண்டாக பிளவுண்டபோது, காங்கிரஸ் கட்சிக்கு சுந்திரத்துக்கு பின் இருந்த 7 ஜந்தர் மந்தர் சாலையில் இருந்த அலுவலகம் வழங்கப்படவில்லை. அங்கிருந்து தற்காலிக அலுவலகத்தில் இந்திரா காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி இயங்கி, பின்னர் அக்பர் சாலை இல்லத்துக்கு வந்தது.
இதையும் படிங்க: ‘அழிவும் நானே... ஆக்கமும் நானே...’மன்மோகன் சிங்கால் காங்கிரஸ் பெற்றதும்... இழந்ததும்... மீளாத சோனியா குடும்பம்..!