அரசியலமைப்பை நீர்த்துப் போகச் செய்யும் பாஜகவின் செயல்பாடுகளுக்கு சவுக்கடி கொடுத்துள்ளது உச்ச நீதிமன்றம்
எனத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செல்வபெருந்தகை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ்நாடு அரசு, சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களை கிடப்பில் போட்டு, வேண்டுமென்றே காலம் தாழ்த்திய ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பின் மூலம் அறிவுரை வழங்கியுள்ளது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குதான் அனைத்து அதிகாரங்களும் உள்ளது என்றும் நியமனப் பொறுப்பில் உள்ளவருக்கு குறிப்பிட்ட அதிகாரம்தான் உள்ளது என்றும் கூறி வந்ததை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அரசியலமைப்பை நீர்த்துப் போகச் செய்யும் பாஜகவின் செயல்பாடுகளுக்கு சவுக்கடி கொடுத்துள்ளது உச்ச நீதிமன்றம். இதன் மூலம் அரசியலமைப்பு பாதுகாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஆளுநரின் மக்கள் விரோத செயல்பாடுகளை கண்டித்து, உச்ச நீதிமன்றத்தின் தெளிவான தீர்ப்பு வந்துள்ளது. இந்த தீர்ப்பினை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக வரவேற்கிறேன்.” என செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அதிகாரங்களை அபகரிக்கும் ஆளுநர்களுக்கு எச்சரிக்கை.. உச்ச நீதிமன்ற தீர்ப்பால் மனம் குளிரும் பினராயி விஜயன்!
இதையும் படிங்க: ஆர்.என். ரவியை பதவியை விட்டு தூக்குங்க.. ஜனாதிபதிக்கு கோரிக்கை வைத்த சிபிஎம்!