அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் நாடு கடத்தப்படுவது புதிதான விஷயமல்ல, கடந்த 15 ஆண்டுகளாகத் தொடர்கிறது என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மாநிலங்களவையில் நேற்று தெரிவித்தார்.
அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் 2வது முறையாக பதவி ஏற்றபின் சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருப்போரை நாட்டைவிட்டு வெளியேற்றும் பணியில் தீவிரமாக இருந்து வருகிறார். அதில் முதலாவதாக இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

டெக்சாஸ் மாகாணம், சான் அன்டோனியோ நகரில் இருந்து அமெரிக்க ராணுவ விமானத்தின் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட 105 இந்தியர்கள் அமிர்தசரஸ் நகரில் தரையிறங்கினர். விமானத்தில் இந்தியர்களை கைவிலங்கிட்டும், கால்களை சங்கிலியால் கட்டியும் வைத்திருந்ததாகவும், 40 மணிநேரம் விலங்குடன் பயணித்ததாகவும் வெளியான தகவல் அதிர்ச்சியை அளித்தது.
இதையும் படிங்க: சட்டவிரோதக் குடியேறிகளுக்கு கை விலங்கு போடுவது அமெரிக்காவின் கொள்கை..! அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்
அமெரிக்காவின் மனிதநேயமற்ற சம்பவத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன, நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தவும் வலியுறுத்தின. இதையடுத்து, எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று பதில் அளித்தார்.

அவர் பேசியதாவது:
அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைந்த இந்தியர்களை அந்நாடு நாடுகடத்துவது புதிதானது அல்ல. கடந்த 15 ஆண்டுகளாக நடந்து வருகிறது. கடந்த 2009ம் ஆண்டிலிருந்து 15 ஆண்டுகளாக 15,756 இந்தியர்கள் அமெரிக்க அரசால் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு வகையான கொள்கை இருக்கிறது, சட்டவிரோதமாக நுழையும் வெளிநாட்டினரை தடுக்க நாமும் குறிக்கோளாக இருக்கிறது. நாமும் அமெரிக்காவுடன் சேர்ந்து சட்டவிரோதமாக நாட்டுக்குள் வருவோரை தவறாக நடத்தவேண்டாம் எனக் கோரமுடியும்.
அதிகபட்சமாக 2019ம் ஆண்டில்தான் அமெரிக்காவில் இருந்து 2,042 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர் 2020ம் ஆண்டில் 1889 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
2009: 734
2010: 799
2011: 597
2012: 530
2013: 515
2014: 591
2015: 708
2016: 1,303
2017: 1,024
2018: 1,180
2019: 2,042
2020: 1,889
2021: 805
2022: 862
2023: 617
2024: 1,368
2025 (பிப்ரவரிவரை): 104
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அங்கிருந்து அந்நாட்டு அரசால் நாடு கடத்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டுவாரியாக விவரங்களை வழங்கியுள்ளோம்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கள்ளத்தனமாக அமெரிக்கா சென்ற இந்தியர்களின் சோகக்கதை..! தலா ரூ.42 லட்சத்தை இழந்த அவலம்..