சனாதனத்திற்கு எதிராக தென் மாநிலங்கள் வலுவாக குரல் கொடுத்து வருகின்றன. குறிப்பாக தமிழ்நாடு எழுப்பும் குரல்கள் வட மாநிலங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. இப்படி இருக்கையில் ஜொகதீப் தன்கரின் பேச்சு முக்கியத்துவம்பெற்றிருக்கிறது.
மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் நடைபெற்ற ஆன்மிக மற்றும் மதத் தலைவரான ஸ்ரீலபிரபுபாதாவின் 150வது பிறந்த தின நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த அவர் சனாதனம் குறித்து பேசியிருக்கிறார். அவர் பேசும்போது "அகிம்சை, அமைதி மற்றும் சகோதரத்துவத்தை வலியுறுத்துவதன் மூலம் உலகுக்கு வழிக்காட்டும் சக்தியாக இருந்து வரும் இந்தியா, ஒருநாள் உலகின் தலைமையாக மாறும். சனாதனம் என்பது அனைவரையும் உள்ளடக்கியதாகும். இது சாதி, மதம், பொருளாதார பாகுபாடுகளுக்கு அப்பாற்பட்டது. இந்தியாவின் அடித்தளம் இதுதான்.

உலகில் வேறு எந்த நாட்டிலும் 5,000 ஆண்டுகள் பழமையான 'சமஸ்கிருதம்' இல்லை. நமது நாடு உலகின் ஆன்மீக மையமாக இருந்து வருகிறது. இந்த உத்வேகத்தை நாம் முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும். இந்த அளவுக்கு பெருமையை கொண்ட நமது நாடு சில நேரங்களில் பின்னடைவையும் சந்தித்திருக்கிறது. சுமார் 1,000-1,500 ஆண்டுகளுக்கு முன்னர் உலகம் முழவதும் இருந்து பல பெரும் அறிஞர்களை ஈர்த்த நாளந்தா மற்றும் தக்ஷஷிலா போன்ற புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் எரிக்கப்பட்டபோது நாம் பின்னடைவை சந்தித்து இருக்கிறோம்.
இதையும் படிங்க: கூட்டணியில் குழப்பம் ஏற்படும் என நினைத்தால் ஏமாற்றமே மிஞ்சும் - முதல்வர் ஸ்டாலின் விளாசல்.
முன்னர் இருந்ததை போன்ற பிரச்சனைகள் இப்போது இல்லை. இந்தியா முன்னேற்ற பாதையில் சென்றுக்கொண்டிருக்கிறது. இவை அனைத்தும் ஆன்மிகம் இல்லாமல் சாத்தியமில்லை. ஸ்ரீ ராமகிருஷ்ணா, சுவாமி விவேகானந்தர், ஸ்ரீ சைதன்யர் மற்றும் ஸ்ரீல பிரபுபாதர் போன்ற சிறந்த ஆளுமைகளால் உலகம் இந்தியாவின் ஆன்மீகத்தையும் நாகரிகத்தையும் ஆதரிக்கிறது" என்று கூறியுள்ளார்.
இந்தியாவில் உள்ள சாதிய பாகுபாடுகளுக்கு சனாதனம்தான் காரணம் என்று பலரும் விமர்சித்து வரும் நிலையில், இந்தியாவின் அடித்தளமே சனாதனம்தான் என்று தன்கர் பேசியிருப்பது கவனம் பெற்றிருக்கிறது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னையில், 'தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள்' சங்கத்தின் சார்பில் 'சனாதன ஒழிப்பு மாநாடு' நடத்தப்பட்டது. இதில் பங்கேற்று உரையாற்றியிருந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்,

"சனாதன 'எதிர்ப்பு' மாநாடு என்று போடாமல் சனாதன 'ஒழிப்பு' மாநாடு என்று நீங்கள் போட்டிருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துகள். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனம் என்பதை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியமாகும்" என்று பேசியிருந்தார். இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்ப தொடங்கின.
உதயநிதியின் தலையை வெட்டுவேன் என்றும், தலையை வெட்டி கொண்டு வருபவர்களுக்கு பரிசு தொகையை கொடுப்பேன் என்றும் கூட வட மாநிலங்களில் பலர் அறிவித்தனர். உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது. இப்படி இன்றுவரை சனாதனம் குறித்த பேச்சுக்கள் தமிழகத்தில் விவாத பொருளாகவே இருக்கின்றன. இந்நிலையில் தன்கரின் பேச்சு சலசலப்புகளை ஏற்படுத்தும் என்றும் சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டிய நேரம் இது... மாணவர்களிடையே ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு..!