நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு தொடங்கிய முதல்நாளிலேயே ஆளுங்கட்சிக்கும், திமுக எம்.பி.க்களும் இடையே கடும் அமளி மூண்டது. இது தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை வரை எதிரொலித்தது.. அப்படி என்ன நடந்தது நாடாளுமன்றத்தில்....

இன்று காலை 11 மணிக்கு மக்களவை கூடிய உடனேயே, தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி ஒதுக்கீடு செய்யப்படாதது குறித்து திமுக எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினர். இதுபற்றி பின்னர் விவாதிக்கலாம் என சபாநாயகர் ஓம் பிர்லா கூறியதை ஏற்க மறுத்த அவர்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து முழக்கங்கள் எழுப்பினர். அப்போது குறுக்கிட்ட மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தேசியக் கல்விக்கொள்கை மூலம் இந்தி திணிக்கப்படுகிறது என்று தவறான வாதத்தை தமிழக அரசு முன்வைப்பதாக குற்றஞ்சாட்டினார். தமிழ்நாட்டு மாணவர்களை திமுக தவறாக வழிநடத்துவதாகவும் அவர் ஆவேசத்துடன் குறிப்பிட்டார். பாஜக ஆளாத மாநிலங்களான கர்நாடகா, இமாச்சலப்பிரதேசம் போன்றவற்றில் கூட தேசியக் கல்விக்கொள்கை ஏற்கப்பட்டு விட்டதை தர்மேந்திர பிரதான் சுட்டிக்காட்டினார். அந்தவகையில் தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை திமுக அரசு பாழ்படுத்தி வருவதாக அவர் கவலை தெரிவித்தார்.
இதையும் படிங்க: திமுக அமைச்சர்களுடன் அதிமுக கள்ள உறவு..? எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே இப்படித்தான்- கே.என்.நேரு ஒரே போடு..!

அவரது பேச்சுக்கு மறுப்பு தெரிவித்து திமுக எம்.பி.க்கள் தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பி வந்தனர். அவரை பேசவிடாமல் கூச்சல் எழுப்பினர். இதனால் கோபம் அடைந்த தர்மேந்திர பிரதான், திமுக எம்.பி.க்கள் நாகரீகமற்றவர்கள், ஜனநாயகத்திற்கு விரோதமானவர்கள் என்று கத்தினார். பிஎம் ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்திட ஒப்புக்கொண்டு கடைசிநேரத்தில் சூப்பர் முதலமைச்சரின் ஆலோசனையின் பேரில் அதில் இருந்து தமிழ்நாடு அரசு பின்வாங்கியதாக அவர் குற்றஞ்சாட்டினார். அந்த சூப்பர் முதலமைச்சர் யார் என்பது குறித்து திமுக எம்.பி.கனிமொழி தான் விளக்க வேண்டும் என்று தர்மேந்திர பிரதான் விமர்சித்தார்.

இதனைக்கேட்டு ஒட்டுமொத்தமாக கிளர்ந்து எழுந்த திமுக எம்.பி.க்கள், தர்மேந்திர பிரதானுக்கு எதிராக முழக்கமிட்டனர். மேலும் திமுக எம்.பி.க்கள் நாகரீகமற்றவர்கள், ஜனநாயகத்திற்கு விரோதமானவர்கள் அவைக்குறிப்பில் இருந்து இந்த வார்த்தையை நீக்க வேண்டும் என்று மக்களவை சபாநாயகரை முற்றுகையிட்டனர். அவரும் அந்த வார்த்தை அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் என்று உத்தரவாதம் அளித்தார்.

தமிழக அரசு மற்றும் திமுக எம்.பி.க்கள் குறித்து நாடாளுமன்றத்தில் தர்மேந்திர பிரதான் பேசியதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக தமிழ்நாட்டின் பல இடங்களில் அவரது உருவபொம்மையை எரித்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். "கல்வி நிதி கொடுக்க வக்கு இல்ல, துப்பு இல்ல எங்கள குறை சொல்றியா" என்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆவேசமாக கோஷமிட்டனர். நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தமிழக அரசுக்கு கல்வி நிதி ஒதுக்கீடு செய்யப்படாத விவகாரம் முக்கிய பேசுபொருளாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது..
இதையும் படிங்க: அவதூறுகளை அள்ளி கொட்டறது தான் இவங்களுக்கு வேலை… திமுகவை விளாசிய எல்.முருகன்!!