எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே மத்திய பாஜக அரசு வக்ஃப் திருத்தச் சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து இரு அவையிலும் நிறைவேற்றியது. இதற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்ததால் சட்டமாகியுள்ளது. இச்சட்டம் அமலுக்கும் வந்துவிட்டது. இச்சட்ட மசோதா மக்களவையில் நிறைவேறியபோதே, அதை எதிர்த்து திமுக சார்பில் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் வக்பு சட்டத்தை எதிர்த்து திமுக உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளது. திமுக எம்.பி. ஆ.ராசா தாக்கல் செய்த அந்த மனுவில், “வக்ஃப் (திருத்தம்) மசோதா, 2025 அரசியலமைப்பிற்கு விரோதமானது மற்றும் முஸ்லிம் சிறுபான்மை சமூகத்தின் உரிமைகள் மற்றும் நலன்களை மோசமாகப் பாதிக்கும். எனவே, அதை திரும்பப் பெறுமாறு மத்திய அரசை வலியுறுத்தி மார்ச் 27 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தை திமுக அரசு நிறைவேற்றியது.
வக்ஃப் திருத்த மசோதா, நாடாளுமன்ற கூட்டுக்குழு உறுப்பினர்கள் மற்றும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய ஆட்சேபனைகளை முறையாகக் கருத்தில் கொள்ளவில்லை. என்றாலும் மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டது. இரு அவைகளிலும் திமுக எம்.பி.க்கள் எழுப்பிய கருத்துகளும் பரிசீலிக்கப்படவில்லை.
வக்ஃப் (திருத்தம்) சட்டம். 2025, 06.04.2025 அன்று அறிவிக்கப்பட்டதிலிருந்து, முஸ்லிம் சிறுபான்மை சமூகத்தின் அடிப்படை உரிமைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: வக்பு சொத்தை அனுபவிக்கும் தனி நபர்கள்.. சட்டத் திருத்தத்தை மனதார வரவேற்கும் ஷேக் தாவூத்..!!

இந்தச் சட்டத்தை உடனடியாக அமல்படுத்துவது தமிழ்நாட்டில் சுமார் 50 லட்சம் முஸ்லிம்களின் உரிமைகளையும், நாட்டின் பிற பகுதிகளில் உள்ள 20 கோடி முஸ்லிம்களின் உரிமைகளையும் மீறுகிறது. இச்சட்டம் பாரபட்சம் காட்டுகிறது என்பதையும் கருத்தில் கொண்டு, 2025 ஏப்ரல் 6 அன்று அமலுக்கு வந்துள்ள வக்ஃப் திருத்தச் சட்டம்-2025ஐ ரத்து செய்ய வேண்டும்” என்று ஆ.ராசா கோரியுள்ளார். ஆ.ராசா சார்பில் வில்சன் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இதையும் படிங்க: வக்ஃபு திருத்த மசோதா முஸ்லீம்களை ஓரங்கட்டும் ஆயுதம்..! பாஜக அரசை விளாசிய செல்வப்பெருந்தகை..!