அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மகன் எம்.பி. கதிர் ஆனந்த் வீட்டில் சுமார் 12 மணி நேரமாக நீடித்த அமலாக்கத்துறை சோதனை நிறைவடைந்துள்ளது.
7 மணி நேரமாக காத்திருந்த அதிகாரிகள்:
திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகனின் வீடு, வேலூர் அருகேயுள்ள காட்பாடி காந்தி நகரில் அமைந்துள்ளது. இதே வீட்டில் அவரது மகனும் வேலூர் மக்களவைத் தொகுதி திமுக எம்.பி-யான கதிர் ஆனந்தும் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று காலை துரைமுருகனின் வீடு, கதிர் ஆனந்திற்கு சொந்தமான கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். அதேபோல் துரைமுருகனுக்கு நெருக்கமான திமுக பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன் மற்றும் அவரது உறவினர் தாமோதரன் வீடுகளிலும் நேற்று காலை சோதனை நடத்தப்பட்டது.
இதையும் படிங்க: துரைமுருகன் வீட்டில் ரெய்டு ..பழைய வழக்கு சம்பந்த வழக்கா ..கொளுத்திப்போட்ட அமைச்சர் காந்தி ..!

கதிர் ஆனந்த் குடும்பத்துடன் துபாய் சென்றிருந்ததாலும், அமைச்சர் துரைமுருகன் சென்னையில் இருந்ததாலும் 7 மணி நேரம் வீட்டின் முன்பு காத்திருந்த அதிகாரிகள், அதன் பின்னரே சோதனையைத் தொடங்கினர். நள்ளிரவு 1.30 மணி வரை கிட்டத்தட்ட 12 மணி நேரம் நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.
கடப்பாறையால் உடைக்கப்பட்ட அறைகள்:
இந்த சோதனையின் போது அமைச்சர் துரைமுருகன் வீட்டிற்கு அதிகாரிகள் கடப்பாறையுடன் நுழைந்தது பரபரப்பைக் கிளப்பியது. இந்நிலையில் வீட்டிற்குள் பூட்டி இருந்த இரண்டு அறைகளை அந்த கடப்பாறையைக் கொண்டு அதிகாரிகள் உடைத்து திறந்ததாக கூறப்படுகிறது.

அந்த அறைகளில் அதிகாரிகளுக்கு முக்கிய ஆவணங்கள் கிடைத்திருக்கலாம் எனக்கூறப்படுகிறது. அதேபோல் கதிர் ஆனந்தின் பொறியியல் கல்லூரியிலும் அமலாக்கத்துறையினருக்கு கட்டுக்கட்டாக பணம் கிடைத்ததாகவும், அதனை எண்ண வங்கி ஊழியர்களுடன் பணம் எண்ணும் இயந்திரத்தையும் அதிகாரிகள் வரவழைத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
திடீர் சோதனையில் பின்னணி:
கடந்த மக்களவை தேர்தலின் போது வேலூர் தொகுதியில் திமுக சார்பில் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட்டார். அப்போது வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய பணம் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. முதலில் கதிர் ஆனந்த் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் காட்டப்படாத 10 லட்சம் ரூபாய் சிக்கியது. இதனையடுத்து துரைமுருகன் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.
அப்போது பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் கட்டுக்கட்டாக 11 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து வேலூர் தொகுதிக்கு முதலில் தேர்தல் நிறுத்தப்பட்டு, மீண்டும் தேர்தல் தொடங்கியது. 2019ம் ஆண்டு வருமான வரித்துறை பதிவு செய்த ஆவணங்களின் அடிப்படையில் அமலாக்கத்துறை வழக்கை பதிவு செய்திருந்தது. அந்த வழக்கை அடிப்படையாக கொண்டே நேற்று துரைமுருகனின் வீடு, கதிர் ஆனந்தின் பொறியியல் கல்லூரி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளை அமலாக்கத்துறை சோதனையிட்டுள்ளது.
இதையும் படிங்க: துபாயில் கதிர் ஆனந்த்... காத்திருக்கும் அமலாக்கத்துறையினர்… தலைமை செயலகத்தில் கூடுதல் பாதுகாப்பு…ரெய்டு பின்னணி என்ன?