அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில், தமிழகத்தில் தலித்கள் மீது தாக்குதல்கள் அதிகரித்துள்ளன என்று ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்திருந்தார். அவருடைய கருத்துக்கு அமைச்சர் கோவி. செழியன் பதில் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,"தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களை, கிடப்பில் போட்ட ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, இந்தியா முழுவதும் பேசப்பட்டு கொண்டிருக்கிறது.

இதை தாங்கிக் கொள்ள முடியாமல், ஆளுநர் ரவி வழக்கம்போல், தமிழக அரசுக்கு எதிராக ஓலமிட்டிருக்கிறார். அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில், அபத்தமான கருத்துகளை வெளியிட்டு உள்ளார். சமூக நீதி குறித்து பேசும் மாநிலத்தில், செருப்பு போட்டு செல்வதற்காகவும், இரு சக்கர வாகனத்தில் செல்வதற்காகவும், தலித்துகள் தாக்கப்படுகின்றனர் எனப் பச்சை பொய்யைச் சொல்லி இருக்கிறார். பட்டியல் ஜாதியினருக்கு எதிரான குற்றங்களில் இந்தியாவிலேயே பீஹார் இரண்டாம் இடத்தில் உள்ளது.
ஆளுநரின் சொந்த மாநிலத்தில், இப்படி அநீதி நடக்கும்போது, தமிழகம் குறித்து பேச அவருக்கு தகுதியே கிடையாது. பீஹாரில் பாஜக தயவில்தான் ஆட்சி நடக்கிறது. அதை கண்டித்து ஆளுநரால் பேச முடியுமா?
சனாதனத்தைத் துாக்கி பிடித்துக் கொண்டே பட்டியலின மக்கள் குறித்து கவலைப்படுகிறார் ஆளுநர். அவரது டபுள் ரோல் நடிப்பு, தமிழகத்தில் எடுபடாது. நாட்டிலேயே பட்டியலின மக்களுக்கு, அதிக அளவில் வன்முறைகள், கொடுமைகள் நடப்பது பாஜக ஆளும் மாநிலங்களில்தான் என்பதை மத்திய அரசின் தரவுகளே சொல்கின்றன.
இதையும் படிங்க: கல்லூரியில் ஜெய் ஸ்ரீராம் கோஷம்.. பதவி விலகுங்கள் ஆளுநரே.. பல்கலை. பேராசிரியர்கள் சங்கம் காட்டம்!

ஜாதிக் கொடுமைகளுக்கு அடிப்படையான, மனு நீதியை உயர்த்தி பிடிக்கும் ஆளுநர் ஆர்.என். ரவி, சாதிக் கொடுமைகளுக்கு எதிராகப் போராடும் சமூக நீதி மாநிலத்தில், நீலிக்கண்ணீர் சிந்துகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஜனநாயக முறையில் செயல்பட்டு வரும், மாநில அரசுக்கு வேண்டுமென்றே குடைச்சல் கொடுக்கிறார்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாடாளுமன்றத்தில் பேசுகையில், 'அம்பேத்கர் எனக் கோஷமிடுவது ஃபேஷனாகி விட்டது. இத்தனை முறை அம்பேத்கர் பெயரை கூறியதற்கு, பகவானின் பெயரை கூறியிருந்தால், அவர்களுக்கு சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும்' எனக் கூறியதும், நாடு முழுதும் கொந்தளிப்பு ஏற்பட்டது.
அப்போது ஆளுநர் மாளிகையில் ஒரு கண்டன கூட்டத்தை ஏன் நடத்தவில்லை. உங்களுக்கும் அம்பேத்கர் பெயரை கோஷமிடுவது ஃபேஷனாகி விட்டதா? ஆரியம் குறித்து பேசும் நீங்கள், அம்பேத்கர் குறித்து பேசவோ, திராவிடத்தை துாற்றவோ, எந்தத் தகுதியும் கிடையாது" என்று கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: #getoutravi.. நஞ்சை மனதில் சுமந்தால் எப்படி சட்டத்தை மதிப்பார்..? மனோ தங்கராஜ் விமர்சனம்..!