அதே "கிணற்றை காணோம்"பாணியில் ஒரு பெண்ணுக்கு ஆபரேஷன் செய்த போது அவருடைய இரண்டு சிறு நீரகங்களையும் (கிட்னி) டாக்டர்களே திருடிய அதிர்ச்சி சம்பவம் வெளியாகி இருக்கிறது.
உத்தரபிரதேச மாநிலம் மீரட் நகரில் இந்த நூதன சிறுநீரக திருட்டு நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், கவிதா தேவி (வயது 43. )புலந் சாஹர் பகுதியில் வசித்து வருகிறார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு உடல் நல குறைவு காரணமாக மீரட் நகரில் உள்ள கே எம் சி மருத்துவமனையில் கவிதா தேவி சிகிச்சை பெற்று இருக்கிறார். அந்த மருத்துவமனையின் உரிமையாளரான டாக்டர் சுனில் குப்தா என்பவர் அந்தப் பெண்ணின் உள் உறுப்புகளை சரி செய்வதற்காக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று சிபாரிசு செய்து இருக்கிறார்.
இதையும் படிங்க: 'கவுன்சிலிங்' என்ற பெயரில், 50 மாணவிகள் பாலியல் பலாத்காரம்; 45 வயது உளவியல் டாக்டர் 'போக்சோ' சட்டத்தில் கைது...

அறுவை சிகிச்சைக்கு பிறகு "இனி உனது சிறுநீரகங்கள் நன்றாக செயல்படும்" என்று டாக்டர்கள் உறுதி அளித்து கவிதா தேவியை டிஸ்சார்ஜ் செய்தனர்.
ஆனாலும் அவருடைய உடல்நிலை தொடர்ந்து பாதிக்கப்பட்டு வந்தது. வழக்கமாக கணவருடன் கூலி வேலையில் கவிதா தேவி உதவியாக இருந்து வருவார். ஆனால் இந்த ஆபரேஷனுக்கு பிறகு அவரால் முன்போல் வேலை செய்ய முடியவில்லை.
அதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு வேறு ஒரு டாக்டரிடம் கவிதா தேவி தன்னை பரிசோதித்துக் கொண்ட போது தான் அவருடைய இரண்டு சிறுநீரகங்களும் திருடப்பட்ட அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.
இதுகுறித்து கவிதா தேவி மருத்துவமனைக்கு சென்று டாக்டர் சுனில் குப்தாவை சந்தித்து அது குறித்து விசாரித்தார். இந்த குற்றச்சாட்டை டாக்டர் திட்டவட்டமாக மறுத்து இருக்கிறார்.
அத்துடன் சிறுநீரகங்கள் திருடப்பட்ட சமயத்தில் நடந்த அறுவை சிகிச்சை பற்றிய ஆவணங்களை வாங்கி டாக்டர் தனது கண் முன்பே கிழித்து போட்டு விட்டதாகவும், தங்களை மிரட்டியதாகவும் கவிதா தேவி கூறியிருக்கிறார்.

இதுகுறித்து உள்ளூர் நுகர்வோர் நீதிமன்றத்தில் கவிதா தேவி சார்பில் முறையிடப்பட்டது. அவருடைய புகார் மனுவை விசாரித்த நீதிமன்றம் அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து நர்ஸேனா போலீசார் வழக்கு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கவிதா தேவி மருத்துவமனையின் உரிமையாளர் டாக்டர் சுனில் குப்தவுடன் மற்ற டாக்டர்களான அஜய் என் வாட்ஸ், சதீஷ் அரோரா, சீமா வாஷ்னே, பிரதீபா குப்தா, நிகிதா ஜக்கி ஆகிய மேலும் 5 டாக்டர்கள் மீதும் புகார் கொடுத்து இருக்கிறார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் கண்ணீர் மல்கியபடி பேட்டி கொடுத்த கவிதா தேவி, "என்னால் எந்த வேலைக்கும் போக முடியவில்லை. உடல் நலமும் தொடர்ந்து மோசமாகி வருகிறது. எங்களுக்கு 10 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் இருக்கிறது. வீடும் அடமானத்தில் தான் இருக்கிறது. எனது மூன்று குழந்தைகளை பராமரிக்க வேண்டும். நான் என்ன செய்வேன்!?" என உருக்கமாக தெரிவித்தார்.
ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை டாக்டர் சுனில் குப்தா முழுமையாக மறுத்திருக்கிறார். "இந்த குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரம் அற்றவை. மிகவும் அபத்தமான மோசடி இது. குற்றச்சாட்டுகளில் துளி கூட உண்மை இல்லை.

இந்த பிரச்சனையில் கடந்த ஆறு ஆண்டுகளாக அவர்கள் என்னை மிரட்டி பணம் பறித்து வந்திருக்கிறார்கள். இந்த புகார் பற்றி போலீசார் நம்பவில்லை. அதனால் அவர்கள் வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை. அதைத்தொடர்ந்து இவர்கள் நீதிமன்றத்தின் மூலம் எனக்கு எதிராக வழக்கு பதிவு செய்து தொடர்ந்து மிரட்டி வருகிறார்கள்" என்று தெரிவித்தார்.
குற்றச் சதி, அபாயகரமான ஆயுதங்கள் அல்லது வழி முறைகளால் தானாக முன்வந்து கடுமையான காயத்தை ஏற்படுத்துதல், குற்றவியல் மிரட்டல் மற்றும் மனித உறுப்புகள் திசுக்கள் மாற்று சட்டம் 1994 (பிரிவு 18) ஆகியவற்றின் கீழ், 6 டாக்டர்கள் மற்றும் சில மருத்துவமனை ஊழியர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதையும் படிங்க: 10 நாட்கள் அடாவடி.. அலறவிட்ட புல்லட் ராஜா யானை ..ஆனைமலைக்கு கொண்டு சென்ற வனத்துறை