டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்றைய தினம் காலையில் புறப்பட்டு டெல்லி சென்றிருந்தார். பட்ஜெட் கூட்டத்துடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழ்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று திடீரென டெல்லி புறப்பட்டு சென்றார். எடப்பாடி பழனிச்சாமியின் இந்த திடீர் டெல்லி பயணத்திற்கு பின் மிகப்பெரிய அரசியல் கணக்கு இருக்கலாம் என்ற யூகங்கள் எழுந்தன. இன்னும் ஓராண்டுக்குள் தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது இந்த தேர்தலுக்கான கூட்டணி கணக்கை நோக்கி இப்போதே காய் நகர்த்த ஆரம்பித்திருக்கின்றன. அந்த வகையில்தான் எடப்பாடியின் இந்த டெல்லி பயணம் இருக்கலாம் என்று கூறப்பட்டது.

ஆனால் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் கட்டப்பட்டு வரும் அதிமுக அலுவலகத்தை பார்வையிட செல்வதாகவே அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன. இதனிடையே அனைவரும் யூகித்தது போல் பாஜக உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துள்ளார்.
இதையும் படிங்க: அதிமுக- பாஜக கூட்டணி உறுதியானது... அமித் ஷாவை சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி..!

பாஜகவுடன் எக்காரணம் கொண்டும் கூட்டணி கிடையாது என பேசி வந்த எடப்பாடி பழனிசாமியின் திடீர் மனமாற்றத்திற்கு தவெக தலைவர் விஜய் தான் காரணம் எனக்கூறப்படுகிறது. அதிமுக சார்பில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு அனுப்பிய தூதை விஜய் நிராகரித்ததாக கூறப்படுகிறது. டிசம்பர் மாதத்திற்கு மேல்தான் முடிவு என்று தெரிந்த நிலையில், வேறு வழி இல்லாமல் தேசிய ஜனநாயக கூட்டணி தான் ஒரே வாய்ப்பு என்று உணரத் துவங்கியுள்ளது.

மற்றொருபுறம் தற்போது ஓபிஎஸ், தினகரன், விகே.சசிகலாவை இணைத்துக் கொள்ள முடியாது எனக்கூறும் அளவுக்கு எடப்பாடி பழனிசாமிக்கு சப்போர்ட் இல்லை என்றும், திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால் கட்டாயம் ஒன்றிணைந்து தான் ஆக வேண்டும் என்பதை கடைநிலை தொண்டன் முதல் முக்கிய நிர்வாகிகள் வரை வலியுறுத்த தொடங்கிவிட்டனர்.
வர உள்ள சட்டமன்ற தேர்தலில் திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒத்த சிந்தனையுள்ள பாஜகவுடன் கூட்டணி வைப்பதே சிறந்தது என அதிமுக கருதுவதாக கூறப்படுகிறது. இந்த இரண்டு காரணங்களால் தான் திடீர் சந்திப்பு நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: கட்சி அலுவலகமா..? இல்லை எடப்பாடியாரின் ரசிகர் மன்றமா..? மீண்டும் அதிமுகவில் போட்டோ சர்ச்சை..!