குமரி மாவட்டம் நித்திரவிளை காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாத கால இடைவெளிக்குள் மட்டும் மூன்றுக்கு மேற்பட்ட திருட்டு சம்பவம் நடந்ததுள்ளது. வீடுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு ஒரே மாதிரியான திருட்டு அரங்கேறியதை போலீசார் கண்டு பிடித்தனர். அதாவது வீட்டின் உரிமையாளர்கள் வீடுகளை பூட்டி செல்லும் அடுத்த கணம் அந்த வீடுகளுக்குள் புகும் மர்ம கும்பல் அனைத்து வீடுகளின் கதவுகளை ஒரே மாதிரியாக கடப்பாரை போன்ற ஆயுதத்தை கொண்டு உடைத்து உள்ளே சென்றுள்ளனர். பின்னர் அறைகளில் இருக்கும் அலமாரிகளை திறந்து அதில் இருக்கும் உடமைகளை கீழே வீசிவிட்டு அதில் மறைத்து வைத்திருக்கும் நகை மற்றும் பணங்களை மட்டும் லாவகமாக திருடி எடுத்து சென்றுள்ளனர்.
ஒரு திருட்டு நடந்து ஒரு வார இடைவெளி விட்டு அடுத்தடுத்த திருட்டுகளை அரங்கேற்றி இருந்தனர். ஒரே சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவங்கள் அரங்கேறியது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியது. போலீசாருக்கும் பெரும் சவாலாக மாறி இருந்தது. இதனை அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வரும் மர்ம கும்பலை பிடிக்க தனிப்படை அமைத்து உத்தரவு பிறப்பித்தார். அதன்பேரில் தனிப்படை போலீசார் மற்றும் காவல்நிலைய போலீசார் குற்றவாளிகளை பிடிக்க தீவிரமாக இறங்கி தேடி வந்தனர்.
இதையும் படிங்க: பிஜேபி பக்கம் சாயும் சசிதரூர்..! மோடியை தொடர்ந்து ஆளுநருக்கு பாராட்டு..!

மேலும் திருட்டு நடைபெற்ற பகுதிகளை சுற்றியுள்ள இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து வந்தனர். அப்போது அனைத்து வீடுகளிலும் திருட்டு நடைபெறுவதற்கு முன் கறுப்பு நிற உடையணிந்த இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் அந்த வீடுகளை நோட்டமிட்டு செல்லும் காட்சிகள் போலீசார் கையில் சிக்கியது. அதனை ஆதராமாக கொண்டு போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை வேளையில் குமரி கேரள எல்லை பகுதியான கொல்லங்கோடு அருகே திருமன்னம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் இரண்டு வாலிபர்கள் தலையில் ஹெல்மெட் அணிந்தபடி வந்துள்ளனர்.

இதனை கண்ட போலீசார் அந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்ட போது முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறி உள்ளனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த இரண்டு வாலிபர்களையும் காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது போலீசாரின் விசாரணைக்கு இருவரும் ஒத்துழைக்காமல் இருந்துள்ளனர். இதனை தொடர்ந்து போலீசார் தங்களது பாணியில் விசாரித்துள்ளனர். உடனே அவர்கள் இருவரும் கேரள மாநிலம் விழிஞ்சம் பகுதியை சேர்ந்த ஶ்ரீகாந்த் என்றும் களக்கூட்டம் பகுதியை சேர்ந்த சுஜித் என்பதும் இருவரும் கேரளாவில் தொடர் திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு கைதாகி சிறை சென்றவர்கள் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும்தான் நித்திரவிளை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வீடுகளை உடைத்து தொடர் திருட்டில் ஈடுபட்டவர்கள் என்பதும் தெரியவந்தது இதனையடுத்து போலீசார் முக்கிய குற்றவாளியான ஶ்ரீகாந்தை அழைத்து கொண்டு அவரது வீடு அமைந்திருக்கும் பகுதிக்கு அழைத்து சென்று அங்கு பதுக்கி வைத்திருந்த திருட்டு நகைகள் மற்றும் திருடுவதற்கு பயன்படுத்திய உபகரணங்களை பறிமுதல் செய்தனர்.

இதில் சுமார் 4 லட்சம் ருபாய் மதிப்பிலான 12 சவரன் நகை மீட்கப்பட்டது. தொடர்ந்து காவல்நிலையத்தில் வைத்து இருவரிடமும் விசாரணை நடத்தி வந்த வேளையில் கழிவறைக்கு சென்ற ஶ்ரீகாந்த் எதிர்பாராத விதமாக வழுக்கி விழுந்து வலது கை முறிவு ஏற்பட்டு உள்ளது. இதனையடுத்து போலீசார் அவருக்கு மருத்துவ சிகிச்சை அளித்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தால் குமரி மாவட்ட மக்களின் அச்சம் குறைந்துள்ளது.
இதையும் படிங்க: ஆளுநரோடு கைகோர்த்த பினராயி விஜயன்..! மத்திய அரசுக்கு நேரடி செக்..!