கேரள மாநிலத்தில் யானைகளுக்கும், மனிதர்களுக்கும் இடையிலான மோதல் அதிகரித்து வருகிறது. அதிரப்பள்ளி வனப்பகுதியில் கடந்த இரு நாட்களுக்கு முன் பழங்குடியினத்தைச் சேர்ந்த இருவரை யானை தாக்கி கொன்றது. இதையடுத்து, யானை தாக்கி இருவர் இறந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்த கேரள வனத்துறை அமைச்சர் சசீதரன் உத்தரவிட்டுள்ளார். தலைமை வனவிலங்கு வார்டன் இந்த விசாரணையை நடத்த உள்ளார்.

வனத்துறை அமைச்சர் சசீதரன் வெளியிட்ட அறிவிப்பில் “பாலக்காடு மாவட்டம் அதிரப்பள்ளி வனப்பகுதிக்குள் சென்ற பழங்குடியினத்தைச் சேர்ந்த அம்பிகா, சதீஸ் ஆகிய இருவரும் தேன் சேகரிக்கச் சென்ற போது யானை தாக்கி பலியானார்கள். இருவரும் மாலை வீடு திரும்பாதது குறித்து அறிந்து குடும்பத்தினர் வனத்துறையினரிடம் தெரிவிக்கவே, அவர்கள் நடத்திய தேடுதலில் இருவரும் யானை தாக்கி இறந்தது தெரியவந்தது. இருவரும் சந்தேகத்திடமான முறையில் கிடந்துள்ளனர். சதீஸின் உடல் வனப்பகுதியிலும், அம்பிகாவின் உடல் ஆற்றுப்பகுதியிலும் இருந்தது. இது குறித்து வனத்துறையினர், போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இருவரும் உயிரிழந்ததற்கான உண்மையான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ‘டிஜிட்டல் கல்வியறிவில்’ கேரளா மாநிலம் முதலிடம்.. இலக்கை எட்டி சாதனை..!

வனத்துறை அமைச்சர் சசீதரன்
எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் கூறுகையில் “கேரள வனத்துறை மெத்தனமாக இருந்துள்ளது. யானை நடமாட்டம் அதிகம் இருக்கும் பகுதியைக் கண்டறிந்து அங்கு மனிதர்கள் செல்வதைத் தடுத்திருக்க வேண்டும். மனிதர்கள் யானை மோதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் 3 பேரை யானை கொன்றுள்ளது. ஆனால், கேரள அரசு கவனக்குறைவாக இருக்கிறது.

மனிதர்கள் வாழுமிடங்களில் யானைகள் கூட்டமாக வருவதைத் தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல யானைகள் வாழுமிடங்களுக்குள் மனிதர்கள் செல்வதையும் தடை செய்ய வேண்டும். கடந்த 3 மாதங்களில் மட்டும் கேரளாவில் 18 பேர் யானை தாக்கி உயிரிழந்துள்ளனர். யானை-மனிதர்கள் மோதல் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கடந்த பிப்ரவரி மாதத்தில் 5 பேர் யானை தாக்கி உயிரிழந்தனர். கேரளாவில் வனப்பகுதி, பரப்பு அதிகம். இங்குள்ள மக்கள் விவசாயம், பணப்பயிர் விவசாயம் செய்யும்போது, அங்கு வனவிலங்குகள் இரைதேடி வரும்போது மனிதர்கள் மிருகங்கள் மோதல் நடக்கிறது.
இதற்கு கேரள வனத்துறைதான் நடவடிக்கை எடுத்து, மனிதர்கள் வாழும் பகுதிக்குள் வனவிலங்குகள் வருவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் மனிதர்கள் விலங்குகள் மோதல் அதிகரிக்கும், வீதிக்கு வந்து மக்கள் போராட வேண்டியிருக்கும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கேரளாவில் வரலாற்று நிகழ்வு.. ‘அனைத்து சமூகத்தினரும்’ வழிபட பிரபல கோயில் கதவு திறப்பு..!