உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும் தமிழ் இருக்கை அமைப்பதன் மூலம் உலக அளவில் தமிழ்மொழிக்கான அங்கீகாரத்தை பெற்று தருதல், தமிழின், தமிழரின் மதிப்பை உயர்த்துதல், தமிழ் மொழியை தமிழ் அறிவு தொகுதிகளை உலக மக்களோடு பகிர்தல், புலம்பெயர் மாணவர்கள் கற்பு உதவுதல், உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களில் தமிழ், தமிழியல் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பல நன்மைகளை அளிக்கிறது.

உலக நாடுகளில் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கையை ஏற்படுத்தும் நோக்குடன் செயல்படும் தமிழ் இருக்கை குழுமத்திற்கு தமிழக அரசு ஆதரவளித்து வருகிறது. இந்த நிலையில் கேரள பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ் வளர்ச்சித்துறைச் செயலர் வே.ராஜாராமன் பிறப்பித்த அரசாணையில், சிலப்பதிகாரம் எனும் பெருங்காப்பியத்தை தமிழுக்கு தந்து அழியாப் புகழ் பெற்ற இளங்கோவடிகளுக்கு கேரளத்தில் ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் ஓர் இருக்கை அமைய வேண்டும் என்பது கேரள வாழ் தமிழர்களின் நீண்டகால விருப்பம் என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: காதலி உள்பட 6 பேரை கொலை செய்த கொடூரன்; திருமணம் செய்து வைக்க மறுத்ததால் நடந்த வெறிச் செயலா?

அந்த வகையில் கேரள பல்கலைக்கழகத்தில் இளங்கோவடிகள் பெயரில் தமிழ் இருக்கை அமைக்க தேவைப்படும் தொகை இரண்டு கோடியை ஐம்பது லட்ச ரூபாயில், தமிழக அரசின் பங்கு தொகையான ஒரு கோடியை கேரள பல்கலைக்கழகத்திற்கு வழங்குமாறு தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் பரிந்துரைத்துள்ளதாக கூறியுள்ளார்.

இதனை பரிசீலித்த அரசு, ஒரு கோடியை சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஒப்படைக்க ஆணை இடுவதாகவும் அதன்படி இளங்கோவடிகள் இருக்கின் மூலம் தமிழ் - மலையாளம் மொழிகளில் ஒப்பாய்வு, மொழிபெயர்ப்பு உள்ளிட்ட பணிகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழ் வளர்ச்சித் துறை அலுவலர்கள் கேரள பல்கலைக்கழக இளங்கோவடிகள் இருக்கையை ஆய்வு செய்ய வருகை தரும் போது முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கேரளாவிலும் தாமரை மலரும்...! மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் நம்பிக்கை..!