சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் துவங்கப்பட்டுள்ளது. பயணிகள் வசதிக்காக, பேருந்து நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் புறநகர் ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில் நடை மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்காக அப்பகுதியில் ஒரு ஏக்கர் 45 செண்ட் நிலத்தை கையகப்படுத்துவது தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் கடந்த 2024 ஜனவரி மாதம் அறிவிப்பு வெளியிட்டார். இதுசம்பந்தமாக ஆட்சேபங்களும் கோரப்பட்டன. ஆட்சேபங்கள் தெரிவிப்பதற்கான கால அவகாசம் முடியும் முன், பொது பயன்பாட்டுக்கு நிலம் தேவைப்படுகிறது என, 2024 ஜூன் மாதம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டார்.

இந்த அறிவிப்பை எதிர்த்து பிரீமியர் லெதர் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்தின் உரிமையாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதையும் படிங்க: எங்க அம்மாவையா திட்டுற.. ஆத்திரத்தில் அப்பாவையே அடித்துக் கொன்ற இளைஞன்..சிக்கியது எப்படி?
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக, சட்டப்படி, முதல் அறிவிப்பை தமிழக அரசு அரசிதழில் தான் வெளியிட வேண்டும். மாறாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர், மாவட்ட அரசிதழில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும், பொதுமக்கள் ஆட்சேபங்களை கேட்ட மாவட்ட ஆட்சியரே, நிலம் பொது பயன்பாட்டுக்கு தேவைப்படுகிறது என அறிவிக்க முடியாது. சட்ட விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை எனக் கூறி, நிலம் கையகப்படுத்துவது தொடர்பான மாவட்ட ஆட்சியரின் இரு அறிவிப்புகளையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.
அதேசமயம், சட்ட விதிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்றி, நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை மீண்டும் மேற்கொள்ளலாம் எனவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலின் கதையை எழுத முயன்றால் அது ஏறத்தாழ 300 ஆண்டுகால வரலாற்றைத் தொடும். 1990கள் வரை தலைநகர் சென்னையில் முக்கியமான பேருந்து நிலையம் என்றால் அது பிராட்வே தான். அங்கு ஏற்பட்ட நெரிசல் அண்ணாசாலை வரை நீண்டதால் 2002-ல் கோயம்பேட்டில் புறநகர் பேருந்து நிலையம் தனியே செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது. முதலில் அதற்கும் ஏராளமான எதிர்ப்புகள் வந்தன. பிறகு கோயம்பேட்டை மையமாக வைத்து புறநகரின் பல பகுதிகள் செழித்து வளர்ந்தன. கோயம்பேடு காய்கறி மார்க்கெட், பூ மார்க்கெட் போன்றவையும் வியாபாரம் தழைக்க காரணமாக அமைந்தன.
இந்த சூழ்நிலையில் தான் கோயம்பேட்டிலும் நெரிசல் ஏற்பட்டு அது மதுரவாயல் பைபாஸ் சாலையைத் தாண்டி தாம்பரம் வரையிலும் நீடித்தது. மறுபுறம் பெருங்களத்தூர் பகுதி போக்குவரத்து நெரிசலால் திக்குமுக்காடிப் போனது. எனவே புறநகர் பேருந்து நிலையத்தை கோயம்பேட்டில் இருந்து மாற்றி கிளாம்பாக்கத்திற்கு கொண்டு சென்றது தமிழக அரசு. அப்படி கொண்டு போகும்பட்சத்தில் அடிப்படை வசதிகள் அனைத்தும் நிறைவேற்றினால் மட்டுமே அது பயணிகளுக்கு உரிய பயனைத் தரும். நடைமேம்பாலம் மட்டுமல்ல ரயில் நிலையம், மெட்ரோ ரயில் போன்ற சேவைகளும் கிளாம்பாக்கத்திற்கு வந்தால் தான், எந்த நோக்கத்திற்காக கிளாம்பாக்கம் உருவாக்கப்பட்டதோ அது முழுமையடையும்.
இதையும் படிங்க: உங்க வீட்டு பிள்ளைங்கள இந்தி படிக்க வைச்சுட்டு பொது இடத்தில் இந்தி எழுத்துகளை அழிப்பீங்களா.? திமுகவை தெறிக்கவிட்ட தமிழிசை.!