உத்தரபிரதேச மாநிலம், பிரயாக் ராஜ் திரிவேணி சங்கமத்தில், மகா கும்பமேளா பக்தி பரவசத்துடன் நடைபெற்று வருகிறது. முக்கியப் பிரமுகர்கள் துறவிகள் உள்ளிட்ட கோடிக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகிறார்கள்.
ஆனால் கும்பமேளா நிகழ்ச்சிகளை விட இந்த ஆண்டு நடைபெறும் விழாவில் நாடு தழுவிய கவனத்தை ஈர்த்தவர் தான் இந்த மோனாலிசா. கும்பமேளாவில் ருத்ராட்ச மாலைகள் விற்கும் பெண்ணாக வலம் வந்த அவர் தனது அற்புத அழகினால் அனைவரையும் வசீகரித்தார்.
அந்த 16 வயது அழகு தேவதையின் பெயர் என்னவென்று கூட முதலில் பலருக்கு தெரியாது. உலகப் புகழ்பெற்ற மோனாலிசா அழகோவியத்தின் பெயரில் அவரை எல்லோரும் மோனாலிசா என்றே அழைக்கத் தொடங்கிவிட்டனர். ஒரே இரவில் அவர் மிகவும் பிரபலம் ஆகிவிட்டார்.
இதையும் படிங்க: மகா கும்பத்தின் 'வைரல் கண்ணழகி' மோனலிசா எந்த சாதி..? இந்தியாவின் நெற்றியில் பிரிட்டிஷ் காலத்தின் களங்கம்..!

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ஒரு சாதாரண எளிய குடும்பத்தைச் சேர்ந்த அந்தப் பெண்ணின் பெயர் மோனி போஸ்லே. அவருடைய வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியதைத் தொடர்ந்து ஊடகத்தின் வெளிச்சமும் அவர் மீது பாய்ந்தது.
அவருடைய அழகும் வசீகரமும் லட்சக்கணக்கான இதயங்களை கொள்ளை கொண்டு விட்டது. தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுமே சமூக ஊடகவியலாளர்கள் அவரைப் பற்றிய படங்களையும் பதிவுகளையும் அதிக அளவில் வெளியிட்டு வருவதை பார்க்க முடிகிறது. மோனலிசா என்ற பெயரில் மட்டுமின்றி "பிரவுன் பியூட்டி", நீல நிற கண்ணழகி என்பது போன்ற அவரவர்களுக்கு பிடித்த பெயரில் அவரை துதி பாடத் தொடங்கிவிட்டனர்.
அவருக்கு சினிமாவில் நடிக்க பல வாய்ப்புகள் வந்ததாகவும் வேகமாக தகவல்கள் பரவத் தொடங்கின. இந்த நிலையில் மோனாலிசாவால் மாலைகள் விற்க முடியாத அளவுக்கு பார்வையாளர்கள் அவரை மொய்க்க தொடங்கியதால் வியாபாரத்தை விட்டு விட்டு சொந்த ஊருக்கு சென்று விட்டதாகவும் தகவல் வந்தது.

இப்போது அடுத்த சுவாரசிய தகவல் என்னவென்றால், 10 நாட்களில் அவர் 10 கோடி ரூபாய் சம்பாதித்து விட்டார் என்பதுதான். இது உண்மையா அல்லது வதந்தியா என்று தெரியவில்லை.. ஆனால் ஊடகத்தினர் தங்கள் விருப்பம் போல் இது குறித்து 'கதை கட்டி' வருகிறார்கள். ஊந்த நிலையில் இந்த வதந்தி குறித்து சிலர் அந்தப் பெண்ணிடமே கேட்டு விட்டனர்.
அதற்கு, தனது வழக்கமான பாணியில் 'கலகல'வென சிரித்தபடி, "இவ்வளவு பெரிய தொகையை நான் சம்பாதித்து இருந்தால், இன்னும் ஏன் இங்கு மாலைகளை விற்றுக் கொண்டு இருப்பேனா?" என்று மோனாலிசா கூறி இருக்கிறார்.
அதே நேரத்தில் மோனாலிசாவின் தந்தை "இந்த ஊடகப் புகழ் வெளிச்சம் தங்களுக்கு வருமானத்தை கூட்டியது என்பதை விட, விற்பனையை பெரிதும் பாதித்தது என்பதுதான் உண்மை" என்ற தனது ஆதங்கத்தையும் வெளியிட்டார்.
"மாலைகள் வாங்குவதை விட அவருடன் செல்பி எடுப்பதில் தான் அனைவரும் ஆர்வம் காட்டினார்கள். அத்துடன் தனது மகளின் பாதுகாப்பிலும் பிரச்சினைகள் ஏற்பட்டது' என்ற தனது வேதனையையும் த பகிர்ந்துக்கள் கொண்டார்.
ஒரு வீடியோ காட்சியில் "தனது குடும்பம் மற்றும் சொந்த பாதுகாப்பிற்காக மீண்டும் இந்தூருக்கே திரும்ப வேண்டியது உள்ளது. அடுத்த மகா கும்பமேளாவிற்கு நான் மீண்டும் வரலாம்; உங்கள் ஆதரவுக்கும் அன்புக்கும் நன்றி" என்று கூறி இருந்ததையும் பார்க்க முடிந்தது.

பொதுவாக நாடு தழுவிய வரலாற்று சிறப்புமிக்க ஒரு விழா நடைபெறும் போது அந்த விழாவின் பக்கவாட்டு துளிகள் ஊடகத்தினரை பெரிதும் கவர்ந்திழுக்கும். அதுவும் இப்போது "உள்ளங்கையில் உலகம்" என்ற அளவில் தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் இல்லாதவர்களே இல்லை என்ற நிலை உள்ளது.
இதனால் அனைவருமே ஊடகவியலாளர்களாக மாறி வருகிறார்கள். இதுபோன்ற அழகுக் காட்சிகளை படம் பிடிக்கும் அவர்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவ விடுகிறார்கள். இப்படித்தான் தமிழக தலைநகர் சென்னையில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டம் மெரினா கடற்கரையில் களை கட்டிய போது, தலையில் பல வண்ண ரிப்பனை கட்டியபடி, இளம் பெண் ஒருவரின் துள்ளாட்டம், அப்போதைய முதல்வருக்கு எதிராக அவர் போட்ட கோஷம் பிரபலமானது.
இந்தப் புகழ் வெளிச்சத்தினால் முக்கிய பிரபலங்களில் ஒருவராக அவர் மாறி, கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் இடம் பெற்று நடந்தது நினைவு இருக்கலாம்!
இதையும் படிங்க: கும்பமேளாவும் அதன் பொருளாதார தாக்கமும்...