மகாராஷ்டிரத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக - சிவசேனா (ஷிண்டே) - தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) கூட்டணி 232 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. முதல்வராக பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் பதவியேற்றார். ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் துணை முதல்வராயினர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கும் முதல்வர் ஃபட்னாவிஸுக்கும் இடையே கருத்து மோதல் நிலவுவதாக தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. ஃபட்னாவிஸ் உடனான சந்திப்புகளையும் ஏக்நாத் ஷிண்டே தொடர்ந்து தவிர்த்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் ஏக்நாத் ஷிண்டே மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், “நான் சாதாரண ஒரு கட்சி தொண்டன்தான். ஆனால், பால் தாக்கரேவின் விசுவாசி. இதை முதலில் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். 2022இல் என்னை சிலர் இலகுவாக எடுத்துக் கொண்டார்கள். நான் அந்த அரசாங்கத்தையே கவிழ்த்துவிட்டேன். சட்டமன்றத்தில் எனது முதல் உரையிலேயே, தேவேந்திர ஃபட்னாவிஸ் 200-க்கும் மேற்பட்ட இடங்களைப் பெறுவார் என்று நான் கூறினேன். ஆனால் எங்களுக்கு 232 இடங்கள் கிடைத்துள்ளன. அதனால்தான் என்னை இலகுவாக எடுத்துக் கொள்ளாதீர்கள் என்று கூறுகிறேன்" என்று ஷிண்டே பூடாகமாகத் தெரிவித்தார். இதனால், முதல்வர் ஃபட்னாவிஸ்ஸையும் பாஜகவையும் ஷிண்டே எச்சரிக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதையும் படிங்க: தீரன் படத்தை மிஞ்சும் கொள்ளை சம்பவம்..! சென்னையில் கைவரிசை காட்டிய மகாராஷ்டிரா கொள்ளையர்கள்..!

மகாராஷ்டிரா முதல்வராக ஏக்நாத் ஷிண்டே இருந்தபோது ஜல்னா நகரில் ரூ.900 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டத்துக்கு ஒப்புதல் அளித்திருந்தார். ஆனால், அந்த திட்டத்தை தற்போது முதல்வர் ஃபட்னாவிஸ் நிறுத்தி வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. 2022இல் 40 எம்எல்ஏக்களுடன் ஏக்நாத் ஷிண்டே உத்தவ் தாக்கரேவின் ஆட்சியைக் கவிழ்த்து பாஜகவுடன் சேர்ந்து முதல்வரானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வாக்காளர்களை விட ஓட்டு அதிகமா இருக்கே? தேர்தல் ஆணையமே பதில் சொல்..! ராகுல் காந்தி பளீர்