திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வடமதுரை சாலையில் உள்ள அரசு மருத்துவமனை அருகே தனியார் வங்கி ஏடிஎம் மையம் உள்ளது. இங்கு நேற்று காலை வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க முயன்றுள்ளனர். அப்போது அந்த மெஷினில் ஏற்கனவே கார்டு ஒன்று இருந்துள்ளது. வாடிக்கையாளர்கள் அதை எடுக்க முயற்சித்த போது கார்டு வெளியே வரவில்லை.
மேலும் கார்டு சொருகும் இடத்தில் மேல் இருந்த பிளாஸ்டிக் விரிசலுடன் காணப்பட்டது. இதனால் சந்தேகம் அடைந்த வாடிக்கையாளர்கள் வேடசந்தூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து மோப்பநாய், தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடைபெற்றது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், `முதல்கட்ட விசாரணையில் கொள்ளை முயற்சி நடைபெற்றதற்கான தடயம் கிடைத்துள்ளது. அதனால் சிசிடிவி பதிவுகளை கொண்டு ஆய்வு செய்து வருகிறோம். கார்டை வெளியே எடுப்பதற்காக ஏடிஎம் மெக்கானிக்குகள் வரவழைக்கப்பட்டு உள்ளனர்.
கார்டு வெளியே எடுக்கப்பட்ட பின்பு அதில் உள்ள தகவல்களின் அடிப்படையில் விசாரணை தொடரும் என்றனர். மேலும் முழு தகவல்களை தெரிந்து கொள்ளாமல், கொள்ளை என வீண் வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.
இதையும் படிங்க: யூடியூப் பார்த்து ட்ரைனிங்.. ஃப்ளைட்டில் வந்து ஏடிஎம் கொள்ளை.. ஹை டெக் கும்பலை கைது செய்த போலீஸ்..!

எனவே சமூக வலை தளங்களில் பதிவிடுவோர், பகிர்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் போலீசார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன் பின்னர் போலீசார் நடந்த்திய விசாரணையில் ஏடிஎம் கொள்ளை முயற்சி வெளிச்சத்திற்கு வந்தது. அதன்படி, நேற்று அதிகாலை ஏ.டி.எம் மையத்திற்குள் நுழைந்த மர்ம நபர் ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயற்சி செய்துள்ளார்.

அப்போது ஏ.டி.எம் அறையில் பொருத்தியிருந்த அலாரம் ஒலித்ததால், அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். இதனிடையே ஏடிஎம்-மில் ஹோல்டட் உடைந்தது குறித்து வாடிக்கையாளர்கள் புகார் அளித்திருந்தனர். இவை அனைத்தும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. கொள்ளையில் ஈடுபட்ட நபர் குறித்து வேடசந்தூர் டி.எஸ்.பி -யின் தனிப்படை போலீசார் ஏடிஎம் மற்றும் அருகில் இருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

அதில் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது செங்குறிச்சி அருகே உள்ள ஆலம்பட்டியைச் சேர்ந்த தங்கராசு என்ற கொடிக்கூத்தன் என்பது தெரியவந்தது. தங்கராசு மரம் மட்டும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி வேடசந்தூர் அருகே உள்ள நத்தப்பட்டியில் உள்ள தனது தந்தை வீட்டில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு மது போதையில் தனது மனைவியை பார்ப்பதற்கு தங்கராசு வேடசந்தூர் வந்துள்ளார்.

அப்போது அங்கிருந்த ஏ.டி.எம். மையத்தை பார்த்தபோது, இதில் அதிக பணம் இருக்கும், உடைத்து பணத்தை எடுத்துச் சென்று மனைவியை மகிழ்விக்கலாம் என்ற எண்ணத்தில் ஏ.டி.எம் மையத்திற்குள் புகுந்துள்ளார். அதன் பின்னர் ஏ.டி.எம் இயந்திரத்தை ஆட்டி, உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அலாரம் ஒலித்ததால், தங்கராசு அங்கிருந்து தப்பிச் சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து வேடசந்தூர் போலீசார் தங்கராஜ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மனைவியை மகிழ்விக்க போதை ஆசாமி ஒருவர் ஏடிஎம் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: இனிமே லேட் ஆகாது! EPFO 3.0 குறித்து மத்திய அமைச்சர் கொடுத்த ஸ்பெஷல் அப்டேட்!