பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டைத் தொடர்ந்து காஷ்மீருக்கு வருவதாக இருந்த சுற்றுலாப் பயணிகளில் 80 சதவீதம் பேர் தங்கள் முன்பதிவை ரத்து செய்துள்ளனர்.

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த 22ம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் சிலர் துப்பாக்கிச்சீடு நடத்தி 26 பேரைக் கொலை செய்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது, சர்வதேச அளவில் கடும் கண்டனங்களை உருவாக்கியது.
இதையும் படிங்க: பஹல்காம் தாக்குதல்.. வழக்கு என்.ஐ.ஏவிடம் ஒப்படைப்பு.. மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி..!
பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் துணைக்குழு இந்த தாக்குதலை நடத்தியதாகத் தெரிவித்தது. இந்தத் தாக்குதல் தொடர்பாக என்ஐஏ விசாரணையைத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் பஹல்காமில் நடந்த தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து கோடை காலத்தில் காஷ்மீருக்கு சுற்றுலா செல்லலாம் என்ற நினைப்பில் ஏராளமானோர் ஹோட்டல்கள், ரயில்கள், பேருந்துகள், விமானங்களில் முன்பதிவு செய்திருந்தனர். இந்த முன்பதிவில் சுற்றுலாப் பயணிகளில் 80 சதவீதம் பேர் தங்கள் முன்பதிவை ரத்து செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காஷ்மீர் ஹோட்டல் கூட்டமைப்பு தலைவர் முஸ்தாக் சாயா கூறுகையில் “காஷ்மீருக்கு வருவதாக இருந்து முன்பதிவு செய்திருந்த சுற்றுலாப்பயணிகளில் 80% பேர் ரத்து செய்துவிட்டனர். எங்களால் புரிந்து கொள்ள முடிந்தது, அவர்களின் செயல் நியாயமானதுதான். நாங்கள் என்ன செய்ய முடியும்.

ஜம்மு காஷ்மீரில் உள்ள வியாபாரிகள் சுற்றுலாப் பயணிகள் வருகை தராததால் வியாபாரம் இல்லை என்பதற்காக நாங்கள் வருத்தப்படவில்லை. ஆனால், எங்கள் மண்ணில் 26 பேரை கொலை செய்துவிட்டார்களே என்று ஆதங்கமும், வருத்தப்படுகிறோம். காஷ்மீர் மக்கள் இந்த கொடூரமான செயலை கண்டிக்கிறார்கள். கடையடைப்பு போராட்டத்தில் மக்கள் அனைவரும் வந்திருந்து போராட்டத்தில் பங்கேற்றனர். முதல்முறையாக தீவிரவாதத்தை ஒழிக்க மக்கள் ஒன்று கூடியது மகிழ்ச்சி. காலம் என்பது மிகப்பெரிய காயநிவாரணி” எனத் தெரிவித்தார்.
மும்பையைச் சேர்ந்த டிராவல் ஏஜென்ட் சதிஸ் வைஷியா கூறுகையில் “காஷ்மீரில் இப்போதுதான் இயல்பு நிலை திரும்பி சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்தது. அதற்குள் பஹல்காம் தாக்குதல் நடத்தப்பட்டு சுற்றுலா துறையை மோசமாக பாதித்துள்ளது.

2010, 2014ல் பெருவெள்ளம், 2019ல் 370 சட்டப்பிரிவு ரத்து என கடினமான சம்பவங்கள் நடந்தன. 2019ம் ஆண்டு புல்வாமா தாக்குதலுக்குப் பின் காஷ்மீரைப் புறக்கணிப்போம் என்றும் போராட்டம் நடத்தினோம். விரைவில் காஷ்மீரில் இயல்புநிலை வந்து சுற்றுலா சுறுசுறுப்படையும். நாங்கள் எப்போதும் அன்பான காஷ்மீர், காஷ்மீரை ஊக்கப்படுத்துவோம் என்ற பிரசாரத்துக்காக இருப்போம்” எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே காஷ்மீர் வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் தலைவர் ஜாவித் அகமது தெங்கா தலைமையில் ஒரு குழுவினர், துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவைச்ஆளுநர் மாளிகையில் சந்தித்துப் பேசினர். அப்போது “பஹல்காம் தாக்குதலை காஷ்மீர் வர்த்தக சங்கங்கள், கூட்டமைப்பு கடுமையாக கண்டிக்கிறது. இந்த கொடூரமான தாக்குதல் காஷ்மீரின் ஆன்மாவை காயப்படுத்திவிட்டது. ஒவ்வொரு குடிமகனின் மனதை உடைத்து, வேதனையில் ஆழ்த்தியது” எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: லண்டனில் இந்தியர்கள் போராட்டம்..! பாக். தூதரக அதிகாரியின் அகங்கார செயலால் பதற்றம்..!