குடியரசு தலைவருக்கும் ஆளுநருக்கும் உச்ச நீதிமன்றம் காலக்கெடு நிர்ணயித்த தீர்ப்பு மக்களாட்சி மற்றும் மாநில சட்டமன்றங்களில் உரிமைகளுக்கு கிடைத்த மகத்தான வெற்றி எனக் கூறி தமிழ்நாடு அரசுக்கு சாதகமாக தீர்ப்பை பெற்று தந்த வழக்கறிஞர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது இந்த விழா பாராட்டு விழா என்று சொல்வதை விட வெற்றி விழா என்று சொல்வதை பொருத்தம் என்றும் இந்திய அரசியல் சட்ட வரலாற்றில் எந்த மாநிலமும் பெற்றிடாத வெற்றிக்கு வித்திட்ட வழக்கறிஞர்களை பாராட்டுவதில் எல்லை இல்லாத மகிழ்ச்சி எனவும் தெரிவித்தார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை ஆளுநர் என்ற நியமன பதவி மூலம் கட்டுப்படுத்த நினைத்த எண்ணம் மற்றும் அரசுகளுக்கு கொடுத்த தொல்லைகள் ஆகியவற்றுக்கு உச்சநீதிமன்றம் மிக முக்கியமான தீர்ப்பை வழங்கி இருப்பதாகவும் இது மக்களாட்சிக்கும், மாநில சட்டமன்றங்களில் உரிமைகளுக்கும் கிடைத்த மகத்தான வெற்றி எனவும் கூறினார்.
இதையும் படிங்க: திராவிட மாடலுக்கு அடித்தளமிட்டவர் பிட்டி தியாகராயர்..! முதல்வர் ஸ்டாலின் புகழாரம்..!

குடியரசு தலைவருக்கும், ஆளுநருக்கும் காலக்கெடு நிர்ணயித்தது மிகப்பெரிய வெற்றி என பேசிய முதலமைச்சர், தமிழ்நாடு அரசின் பத்து மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்படுவதாகவும் இந்த மசோதாக்கள் அனைத்தும் உடனே சட்டமாகி நடைமுறைக்கு வருவதாகவும் நிதியரசர்கள் தீர்ப்பளித்த போது ஒட்டுமொத்த இந்திய மாநிலங்களும் தலைநிமிர்ந்து உச்ச நீதிமன்றத்திற்கு வணக்கம் செலுத்தியதாக கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், மாநில அரசுகளின் உரிமைகளை எந்த காலத்திலும் பாதுகாக்கும் வரலாற்று சாசனமாக இந்த தீர்ப்பு என்றும் நிலைத்திருக்கும் எனவும் இது இந்திய மாநிலங்களுக்கு தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தால் பெற்று தந்திருக்கக் கூடிய மாபெரும் விடுதலை எனவும் பேசினார். உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெ னரல் அபிஷேக் சிங்வி அவர்களை தமிழ்நாடு அரசின் சார்பில் பாராட்டுவதாகவும் உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திரிவேதி அவர்களை தமிழ்நாடு அரசின் சார்பில் பாராட்டுவதாகவும், உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞரும் மாநிலங்களவை உறுப்பினருமான வில்சன் அவர்களை தமிழ்நாடு அரச சார்பில் பாராட்டுவதாகவும் கூறினார். மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்ற இலக்கை வென்றெடுக்க இந்த தீர்ப்பு வழிகாட்டி இருப்பதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழகத்தில் சாம்சங் நிறுவனம் ரூ.1000 கோடி முதலீடு..! அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பெருமிதம்..!