ட்ரம்ப் மீடியா மற்றும் டெக்னாலஜிஸ் என்ற பெயரில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் எக்ஸ் தளத்தைப் போன்றே சமூக வலைதளம் ஒன்றை ட்ரூத் சோஷியல் மீடியா என்ற பெயரில் உருவாக்கி உள்ளார். முழுக்க, முழுக்க அமெரிக்கர்களுக்கான சமூக வலைதளமாக அது வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் வளம், வரலாறு, வலதுசாரி தத்துவங்களுக்கு அது முக்கியத்துவம் கொடுக்கிறது.

சமீபத்தில் அமெரிக்காவின் புகழ்பெற்ற நெறியாளர் லெக்ஸ் ப்ரீட்மேனுடன், பிரதமர் நரேந்திர மோடி பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். கிட்டத்தட்ட 3 மணிநேரம் அந்த பேட்டி இடம்பெற்றிருந்தது. அதனை தனது ட்ரூ சோஷியல் சமூக வலைதள பக்கத்தில் அமெரிக்க அதிபர் பகிர்ந்து இருந்தார்.
இதையும் படிங்க: ஆபத்தான பயங்கரவாதி.. ஐ.எஸ். முக்கிய தலைவரை 'காலி' செய்த அமெரிக்கா - ஈராக் கூட்டுப் படைகள்..!

உடனடியாக ட்ரூத் சோஷியல் மீடியாவில் பிரதமர் நரேந்திர மோடி இணைந்துள்ளார். அத்தோடு மட்டுமல்லாமல் அதில் தனது முதல் பதிவாக, தன்னுடைய காணொலியை பகிர்ந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
லெக்ஸ் ப்ரீட்மேனுடனான பேட்டியில் என்னுடைய வாழ்க்கைப் பயணம், இந்தியாவின் நாகரீகம், உலகளாவிய பிரச்னைகள் ஆகியவை குறித்து பேசி உள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்துவதிலும், அதனை மக்களோடு பகிர்வதிலும் பிரதமர் நரேந்திர மோடி அதிக முக்கியத்துவம் கொடுத்து வருபவர். குஜராத் முதலமைச்சராக அவர் பதவி வகித்த காலத்திலேயே, குஜராத் மாடல் என்ற சொல்லாட்சியை உருவாக்கி, சமூக வலைதளங்களில் உலவச் செய்ததில் அவருக்கு முக்கியப் பங்குண்டு. அதேபோன்று காலம்காலமாக நடைபெற்று வந்த தேர்தல் பிரசார யுக்திகளை சமூக வலைதளத்திற்கு மாற்றிய பெருமையும் பிரதமர் நரேந்திர மோடியையேச் சாரும். அவரது வருகைக்குப் பிறகுதான், அரசியல் கட்சிகள் எக்ஸ் தளத்தை தங்களின் செய்தித் தொடர்புக்கான சேவையாக பார்க்க ஆரம்பித்தன.
அந்த வரிசையில், தற்போது அமெரிக்க அதிபரின் ட்ரூத் சோஷியல் சமூக வலைதளத்திலும் பிரதமர் மோடி அடியெடுத்து வைத்துள்ளார். அங்கு என்னவெல்லாம் செய்ய காத்திருக்கிறார் என பேசுகின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
இதையும் படிங்க: 41 நாடுகளின் மக்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை... படிப்படியாக அமல் செய்ய அதிபர் ட்ரம்ப் திட்டம்..!