ரம்ஜான் பண்டிகை என்று நாடு முழுவதும் இஸ்லாமியர்களால் வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. காலை முதலில் அனைத்து மசூதிகளிலும் இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டதுடன், ஒருவரை ஒருவர் கட்டியணைத்து ரம்ஜான் வாழ்த்துக்களை உளமாற பரிமாறிக் கொண்டனர்.

இந்த புனித ரம்ஜான் பண்டிகையை ஒட்டி பிரதமர் மோடி நாடு முழுவதும் உள்ள அனைத்து இஸ்லாமியர்களுக்கும் ரம்ஜான் வாழ்த்துக்களை கூறியுள்ளார். புனித ரம்ஜான் நம் சமூகத்தில் நம்பிக்கை, நல்லிணக்கம் மற்றும் கருணை ஆகியவற்றை மேம்படுத்தட்டும் என்றும் இஸ்லாமியர்கள் அனைவரின் எல்லா முயற்சிகளிலும் வெற்றியும் மகிழ்ச்சியும் கிடைக்கட்டும் என்றும் வாழ்த்தி உள்ளார்.
இதையும் படிங்க: ரம்ஜான் வளமான சமூகத்தை கட்டமைக்க ஊக்குவிக்கிறது.. ஜனாதிபதி, துணை ஜனாதிபதி உள்ளிட்டோர் வாழ்த்து..!

இதேபோல், மக்களவை எதிர் கட்சி தலைவர் ராகுல் காந்தி, ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறி உள்ளார். இந்த மகிழ்ச்சியான சந்தர்ப்பம் உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் அமைதி, மகிழ்ச்சி மற்றும் நல்ல ஆரோக்கியத்தை கொண்டு வரட்டும் என்று வாழ்த்தி உள்ளார்.

தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில் புனித ரம்ஜான் பண்டிகையை கொண்டாடும் இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் தமிழக பாஜக சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார். அனைவரின் வாழ்விலும் அமைதி, மகிழ்ச்சி நிலவவும், அன்பும் நிம்மதியும் நிலைக்கவும், சகோதரத்துவமும், நல்லிணக்கமும் சிறக்கவும், செழிப்பை அளிக்க கூடிய நன்னாளாக, இந்த ரம்ஜான் தினம் அமையட்டும் என, எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

இதேபோல், நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடும் இஸ்லாமியர்களுக்கு ஓ. பன்னீர்செல்வம் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்லாமியப் பெருமக்கள் மன மகிழ்ச்சியுடன் கொண்டாடும் ஈகைத் திருநாளாம் "ரம்ஜான்" திருநாளில் எனது இதயம் கனிந்த ரம்ஜான் நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் இந்த ரம்ஜான் திருநாள் இஸ்லாமியர்களுக்கு ஏற்றத்தையும் இன்பத்தையும் தருவதாக அமையட்டும் எனவும் வாழ்த்தி உள்ளார்.

இதே போல் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டு ரம்ஜான் வாழ்த்து செய்தியில், புனித ரமலான் மாதத்தில் இறை சிந்தனையோடு, உடல் வருத்தத்தையும் பொருட்படுத்தாது உலக நலனை வேண்டி, நபிகள் பெருமானார் காட்டிய நெறிவழி தவறாது உண்ணா நோன்பினை வாழ்வின் முக்கியக் கடமையாக ஏற்றுக் கண்ணும் கருத்துமாக நிறைவேற்றிக்கொண்டிருக்கும் உங்கள் ஒவ்வொருவருக்கும் என்னுடைய நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.
நபிகள் பெருமானார் காட்டிய அன்பு வழியில், அறநெறி பற்றி புனித ரமலான் மாதத்தில் இறைவனை எண்ணி நோன்பு நோற்று உடலையும், உள்ளத்தையும் பண்படுத்திக்கொண்டிருக்கும் எனதன்பு இசுலாமியச் சொந்தங்கள் நோன்பு கடமையை முழுமையாக நிறைவேற்றி, இல்லாதவருக்கு ஈயும் இன்பத்திருநாளான ஈகை பெருநாளை மகிழ்வுடன் கொண்டாடி எந்நாளும் தாய்த்திரு தமிழ்மண்ணில் ஒற்றுமையுடனும், சகோதரத்துவத்துடனும் வாழ வேண்டும் என்று வாழ்த்துவதாக கூறியுள்ளார்.
இதையும் படிங்க: RAMZAN-ல் RAM...DIWALI-ல் ALI - அசத்தும் டெல்லி முதல்வர் ரேகா குப்தாவின் மத நல்லிணக்கம்..!