கலாச்சாரக் காவலர்கள் வேலையை நீதிமன்றங்கள் செய்யக்கூடாது என்று பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில உயர் நீதிமன்றத்தை கடிந்து கொண்ட உச்ச நீதிமன்றம், அந்த நீதிமன்றம் அளித்த தீர்ப்பையும் ரத்து செய்தது.

ஜெயின் துறவி தருண் சாகரை கிண்டல் செய்ததாக அரசியல் ஆய்வாளர் தெஹ்சீன் பூனாவல்லா மற்றும் இசையமைப்பாளர் தத்தாலின் ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் பூனாவல்லா சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: 'பதவி நீக்கும் அதிகாரம் நீதிமன்றங்களுக்கு இல்லை..!' உச்சநீதிமன்றத்தையே மிரள வைத்த செந்தில் பாலாஜி
இந்த வழக்கில் கடந்த 2019ம் ஆண்டு பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், “ தத்லாலின் மற்றும் பூனாவல்லா ஆகியோர் தலா ரூ.10 லட்சத்தை அபராதமாகச் செலுத்தினால்தான் அவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட முதல்தகவல் அறிக்கையை ரத்து செய்ய முடியும். இந்த சம்பவத்துக்குப்பின் இனிமேல் யாரும் மதத்தலைவர்களை கிண்டல் செய்யக்கூடாது என்பதற்கு பாடமாக இருக்க வேண்டும்” எனத் தீர்ப்பளித்தனர்.

இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பூனாவல்லா சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த 6 ஆண்டுகளாக நடந்தவந்த நிலையில் உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. அதில் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபியே எஸ்ஓகே மற்றும் உஜ்ஜால் புயான் தலைமையிலான அமர்வு அளித்த தீர்ப்பில் கூறுகையில் “ பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம், வழக்கில் உள்ள உண்மைத் தன்மை ஆய்வு செய்வதற்குப் பதிலாக குறிப்பிட்ட மதத்தில் உள்ள மதத்தலைவரை பற்றித்தான் சிந்தித்துள்ளனர்.

இது என்னமாதிரியான உத்தரவு என எங்களுக்குத் தெரியவில்லை. இந்த வழக்கில் அபராதம் விதிக்க என்ன அவசியம் இருக்கிறது. நீதிமன்றங்கள் கலாச்சாரக் காவலர்கள்போல் செயல்படக்கூடாது. இந்த வழக்கில் பூனாவல்லா, தத்தாலி இருவர் மீது பதிவு செய்யப்பட்ட முதல்தகவல் அறிக்கையை ரத்து செய்து அவர்களை வழக்கில் இருந்து விடுவிக்கிறோம்” எனத் தீர்ப்பில் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஆளுநருக்கு ஆப்பு... உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு...!