ஒரு காலகட்டத்தில் பொதுமக்களின் தகவல் பரிமாற்ற சேவைகளில் முக்கிய இடம் வகித்தது தபால், தந்தி சேவைகள் தான். வெளி நகரங்களில் இருப்பவர்களுக்கு ஒரு தகவலை சொல்வதற்காக கடிதங்கள் எழுதி அதனை அஞ்சலகங்களில் உள்ள தபால் பெட்டிகளில் மக்கள் சேர்ப்பார்கள். அதனை தபால் ஊழியர் எடுத்து சம்பந்தப்பட்ட முகவரிகளுக்கு அனுப்பி வைப்பார். தூரத்தை பொறுத்து குறிப்பிட்ட நாட்களில் அந்த கடிதம் உரியவருக்கு சென்றடையும்.
ஆனால் வளர்ந்து வரும் நவீன காலத்திற்கேற்பவும், மாறிவரும் கலாச்சாரத்திற்கு ஏற்பவும், இன்றைய அவசர உலகில் செல்போன்கள், இணையங்கள், சமூக வலைதளங்களின் மூலமாக நொடிப்பொழுதில் தகவலானது உலக அளவில் பரவி வருகிறது. இதனால் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் அஞ்சலங்களுக்கு மவுசு பெருமளவில் குறைந்துவிட்டது.
ஆனாலும் நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு சேமிப்பு திட்டங்களை அறிவித்து இன்றளவும் அஞ்சலகங்கள் தாக்குப்பிடித்து இயங்கி வருகிறது. நெல்லை மாவட்டத்தில் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை இன்றளவும் தபால் பெட்டிகள் இருக்கின்றன.
இதையும் படிங்க: இந்தி திணிப்பின் முதல் போராளி பெரியார்..? வரலாறே தெரியாமல் உதயநிதியின் உருட்டல் பேச்சு..!

அந்த பெட்டிகளில் தமிழில் தபால் பெட்டி என எழுதப்பட்டிருக்கும். தொடர்ந்து ஆங்கிலத்தில் எழுதபட்டிருக்கும். இந்நிலையில் சமீப காலமாக பழைய பெட்டிகளை மாற்றிவிட்டு புதிதாக வைக்கப்படும் தபால் பெட்டிகளில் தமிழ் எழுத்துக்களை பார்க்க முடியவில்லை. மாறாக அந்த பெட்டிகளில் வாசகங்கள் எழுதப்பட்ட மொழிகளில் இந்தி முதல் இடமும், ஆங்கிலம் 2-ம் இடமும் பிடித்துள்ளன. தமிழில் எந்தவொரு வாசகமும் இடம்பெறவில்லை. இது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
நெல்லை மாநகரில் தபால் பெட்டிகளில் தமிழ் முற்றிலுமாக தவிர்க்கப்பட்டுள்ளது. இந்தியன் போஸ்ட், லெட்டர் ஆகிய வார்த்தைகள் மட்டும் ஆங்கிலத்தில் உள்ளது. மற்ற வார்த்தைகள் இந்தியில் இருக்கிறது. இதற்கு தமிழ் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே தமிழகத்தில் இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சி செய்வதாக கூறி பல்வேறு கட்ட போரட்டங்களை தமிழ்நாடு அரசு நடத்தி வருகிறது. இதனால் அரசு அலுவலகங்களில் இந்தி மொழியை எந்தெந்த வழிகளில் எல்லாம் திணிக்க முடியுமோ அப்படியெல்லாம் திணிக்க மத்திய அரசு முயற்சி செய்வதாக அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து அஞ்சலக அதிகாரிகளிடம் கேட்டபோது, இதுவரை பயன்படுத்தி வந்த தபால் பெட்டிகளில் தமிழில் தபால் பெட்டி என எழுதப்பட்டிருந்தது. ஆனால் தற்போது புதிதாக வைக்கும் பெட்டிகளில் இந்தியில் தான் எழுத வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் அடிப்படையிலேயே இந்தியில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட தபால் பெட்டிகள் வைக்கப்படுகிறது என்றனர்.
இதையும் படிங்க: கேந்திரிய பள்ளிகளில் தமிழாசிரியர்கள் எண்ணிக்கை 0.. சமஸ்கிருத ஆசிரியர்கள் 65.. மத்திய அரசுக்கு கனிமொழி கிடுக்கிப்பிடி!!