கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து நேற்றிரவு திருப்பதிக்கு ரயில் ஒன்று சென்றது.
அதில் ஸ்ரீராமன் என்பவர் தனது குடும்பத்தினருடன் திருப்பதியில் நடக்கும் உறவினர் இல்ல விழாவிற்கு சென்று கொண்டிருந்தார்.
ரயிலின் கதவருகே நின்று கொண்டு பயணித்த ஸ்ரீராமன், திருப்பூர் ரயில் நிலையத்தைக் கடக்கும் போது திடீரென ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார்.
இதையும் படிங்க: மீண்டும், மீண்டுமா?... ஓடும் ரயிலில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை... போதை ஆசாமியை தட்டித்தூக்கிய காவல்துறை...!
இதுகுறித்து அவரது உறவினர்கள் டிக்கெட் பரிசோதகர் (TTR)-க்கு தகவல் கொடுத்தனர்.
விபத்து நடந்த சரியான இடம் தெரியாத நிலையில், டிக்கெட் பரிசோதகர் சேலம் வணிகக் கட்டுப்பாட்டுக்குத் தகவல் தெரிவித்தார்.
ஸ்ரீராமனின் உறவினர்களின் உதவியுடன் அவரது கைபேசி எண்ணைக் கண்டறிந்து, இருப்பிடத்தைக் கண்டறியும் முயற்சியில் போலீசார் இறங்கினர்.
கைபேசியின் இருப்பிடம் கோவை ரயில் நிலையத்தில் இருந்து 11 கி.மீ தொலைவில் உள்ளதாகக் கண்டறியப்பட்டது.

உடனடியாக, கோவை ரயில்வே போலீசார் தேவராஜன், சுமேஷ் மற்றும் மனுபிரசாத் ஆகியோரைக் கொண்ட குழுவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
நீலிகோணம் பாளையம் அருகே ரயில் தண்டவாளப் புதர் பகுதியில் தேடிய போது, படுகாயங்களுடன் ஸ்ரீராமன் விழுந்து கிடப்பதை கண்டனர்.
ரயில் கதவுகள் வேகமாகத் திறக்கப்பட்டதால் அவர் வெளியே தூக்கி வீசப்பட்டதாக ஸ்ரீராமன் தெரிவித்துள்ளார்.
விழுந்த வேகத்தில் ஸ்ரீராமனின் தலையில் மூன்று இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருந்ததோடு, உடல் முழுவதும் பலத்த காயங்கள் ஏற்பட்டு இருந்தன.
சம்பவ இடத்திலேயே 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

ஸ்ரீராமனின் உடல்நிலை தற்போது ஆபத்தில் இல்லை என்றும், இருப்பினும் தலையில் ஏற்பட்ட காயங்கள் கடுமையானவையாக உள்ளதால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்களும் தெரிவித்து உள்ளனர்.
இதையும் படிங்க: திண்டுக்கல்லில் மற்றொரு ரயில் சைக்கோ..! போதையில் அட்ராசிட்டி..!