கேரள மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வரும் போதை மருந்து பயன்பாடு, போதை பயன்படுத்தும் கலாச்சாரம் மாநில அரசுக்கு பெரிய தலைவலியாக மாறியுள்ளது. இதைத் தடுக்க பல நடவடிக்கைகள் எடுத்தும் கட்டுப்படுப்படுத்த முடியவில்லை.
தனிநபர்கள் போதை மருந்துகள், மாத்திரைகள், ஊசிகள் பயன்பாடும், மனித மூளையை செயல்விடாமல் முடக்கும், மாற்றும் ரசாயன போதைப்பொருட்கள் பயன்பாடு கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது மாநில அரசுக்கு பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது. அடுத்துவரக்கூடிய இளைய சமூகம் பெரும்போதையில் சிக்கிதவிக்கும் சூழலை கேரளா எதிர்கொண்டுள்ளது.

இந்த மாதத்தில் ஒரு வழக்கில் கேரள உயர் நீதிமன்றம், போதை மருந்து பயன்பாடு குறித்து மாநில அரசுக்கு அளித்த அறிவுரையில் “போதை மாஃபியாவின் விஷப் பற்கள் பள்ளிக் குழந்தைகள் வரை சென்றுவிட்டன. மாநிலத்தில் போதை மருந்து பயன்பாடு, கலாச்சாரம் அதிகரிப்பது கவலையளிக்கிறது” எனத் தெரிவித்திருந்தது. மாநில ஆளுநரும், அனைத்து பல்கலைக்கழக துணை வேந்தர்களை அழைத்து போதை மருந்து பயன்படுத்தும் மாணவர்களை கண்டுபிடிக்கவும், பல்கலைக்கழத்துக்குள் போதை பழக்கத்தை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவி்ட்டார்.
இதையும் படிங்க: சி.எஸ்.ஆர். நிதி மோசடி.. ஆயிரத்துக்கும் அதிகமான எப்.ஐ.ஆர் பதிவு - பினராயி விஜயன் தகவல்..!
மாநிலத்தில் மாணவர்களிடையே, இளைஞர்களிடையே போதைப் பழக்கம் அதிகரித்து வருவதைத் தடுக்கும் வகையில் “லவ் ஏ தான்” என்ற பிரசாரத்தை மாநில உயர்கல்வித்துறை முன்னெடுத்தது. மாநிலத்தில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட காவல் உதவி ஆய்வாளர்களை போதை மருந்து புழக்கம், விற்பனை, பயன்பாடு உள்ளிட்டவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முதல்வர் பினராயி விஜயன் கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தார்.

கடந்த மாதம் கேரள சட்டப்பேரவையில் வழக்கமான அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு, மாநிலத்தில் இளைஞர்களிடையே அதிகரித்துவரும் போதை மருந்து கலாச்சாரம், போதை மருந்து பயன்பாடு, விற்பனை ஆகியவை குறித்து காரசாரமான விவாதமும் நடந்தது.
ஒட்டுமொத்தமாக கேரள அரசு மாநிலத்தில் மெல்ல இளைஞர்களை புற்றுநோய் போல் செல்லரித்துவரும் போதை பழக்கத்தை நினைத்து பெரும் கவலையும், அச்சத்திலும் இருக்கிறது. இதை நிலை கேரளாவில் இன்னும் சில ஆண்டுகளுக்கு நீடித்தால், மாநிலதில் எதிர்காலத்தில் உருவாகும் இளைஞர்களில் போதைக்கு அடிமையாகாதவர்கள் சதவீதம் குறைவாகவே இருக்கக்கூடும்.
கேரள மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் போதை மருந்து பயன்பாடு, விற்பனை,வைத்திருத்தல், கூட்டாக அருந்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் குறைந்தபட்சம் 500 வழக்குகள் என்டிபிஎஸ்(NDPS) சட்டத்தின் கீழ் பதிவாகியுள்ளன.

என்டிபிஎஸ் என்பது போதை மருந்து மற்றும் மூளை மாற்றும் ரசாயான மருந்துகள் சட்டம் 1985 ஆகும். 2017ம் ஆண்டில் கேரளாவில் என்டிபிஎஸ் சட்டத்தின் கீழ் 5,695 வழக்குகள்தான் பதிவாகியிருந்தன. ஆனால் 2022ம் ஆண்டில் அதாவது 5 ஆண்டுகளில் இந்த வழக்குகள் எண்ணிக்கை 26,619 ஆக அதிகரித்தது, 2023ம் ஆண்டில் 30ஆயிரம் வழக்குகளைக் கடந்தது. 2024ம் ஆண்டில் போலீஸார் விழித்துக் கொண்டதையடுத்து 27,701ஆகக் குறைந்தது.
போதை மருந்து பயன்பாடு, ரசாயன போதை மருந்து பயன்பாடு கேரளாவில் மட்டும் கவலைக்குரியதாக மாறவில்லை, பஞ்சாப், மகாராஷ்டிரா, தமிழகம், உத்தரப்பிரதேசத்திலும் அதிகரித்துள்ளது அந்தந்த மாநில அரசுகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 2023ம் ஆண்டில் மகாராஷ்டிராவில்தான் அதிகபட்சமாக என்டிபிஎஸ் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவாகின, அதில் பாதியளவு கேரளாவில் பதிவாகின.
2023, 2024ம் ஆண்டுகளில் பல மாநிலங்களில் போதை மருந்து தடுப்பு நடவடிக்கை தீவீரமாகிய நிலையில், பஞ்சாப், கேரளாவில் மட்டும் அதிகரித்தது. அது மட்டுமல்லாமல், போதை மருந்து வழக்குகளும் அதிகரித்த நிலையில், மாநிலத்தில் போதைப் பழக்கத்துக்கு அடிமையாவோரின் எண்ணிக்கையும் அதிகரித்தது கேரள அரசுக்கு கவலையை ஏற்படுத்தியது. 2024ம் ஆண்டில் மட்டும் ஒவ்வொரு ஒரு லட்சம் பேருக்கு 78 பேர் தீவிரமான போதைப் பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளது தெரியவந்தது.

பஞ்சாப் மாநிலத்தில் போதை மருந்து தொடர்பாக வழக்குகள் வீதம் அதிகரித்தாலும் விற்பனை, கடத்தல்தான அதிகரித்தது ஆனால், பயன்பாடு குறைந்ததால், ஒருலட்சம் பேருக்கு 30 பேராகத்தான் இருந்தது. சிறிய மாநிலமான மிசோரத்தில் ஒரு லட்சம் பேருக்கு 25 பேர் தீவர போதைப் பழக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
கேரளாவில் இந்த நிலை மிகவும் மோசமாகி, 2022ம் ஆண்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் 500 வழக்குகள் என்டிபிஎஸ் மூலம் பதிவாகின. இது எந்த மாநிலத்திலும் இல்லாத மோசமானநிலைக்கு கொண்டு சென்றது.
2022ம் ஆண்டில் மகாராஷ்டிராவில் என்டிபிஎஸ்சட்டத்தின் பதிவான வழக்குகளில் 83 சதவீதம் மும்பை மாவட்டத்தில்தான் பதிவாகியிருந்தது. கர்நாடகத்தில் பதிவான வழக்குகளில் பெங்களூரு மாவட்டத்தில் மட்டும் 63%, இதற்கு நேர்மாறாக, கேரளாவில் உள்ள எந்த ஒரு மாவட்டத்திலும் மாநிலத்தின் மொத்த வழக்குகளில் 10% க்கும் அதிகமாகப் பதிவாகவில்லை.

என்டிபிஎஸ் சட்டத்தில் இரு பிரிவுகள் உள்ளன. ஒன்று போதை மருந்துகளை தனிப்பட்ட பயன்பாட்டுக்கு வைத்திருப்பது 2வது, போதைக் கடத்தல், விற்பனைக்காக வைத்திருப்பதாகும். கேரளாவில் 94 சதவீத என்டிபிஎஸ் வழக்குகள் தன்னுடைய சுயபயன்பாட்டுக்காக வைத்திருந்ததாக இருந்தது. 2022ம் ஆண்டில் 6% வழக்குகள் மட்டுமே கடத்தல் என்ற ரீதியில் பதிவாகியிருந்தது.
2022ம் ஆண்டில் போதை மருந்து வைத்திருந்ததாக என்டிபிஎஸ் சட்டத்தில் பதிவான வழக்குகள் கொண்ட முதல் 25 மாவட்டங்கள் பட்டியலில் 17 மாவட்டங்கள் கேரள மாநில மாவட்டங்கள்தான். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆயிரத்துக்கும் அதிகமான வழக்குகள் பதிவாகியிருந்தது.
ஆனால் போதை மருந்து கடத்தலுக்காக, விற்பனைக்காக பதிவு செய்யப்பட்ட வழக்குகளைக் கொண்ட டாப் 25 மாவட்டங்களில் கேரளா மாவட்டம் ஏதுமில்லை. ஆனால், தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில் 4வது இடத்திலும் அங்கு 667 வழக்குகள் என்டிபிஎஸ் சட்டத்தில் பதிவாகியுள்ளன.

கேரளாவில் தனிநபர்கள் போதை மருந்து பயன்படுத்துவது, வைத்திருப்பது, இளைஞர்கள் குறிப்பாக ரசாயன போதை மருந்து பயன்படுத்துவது அதிகரித்துள்ளது அரசுக்கு பெரிய கவலையையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தகவல்கள் அனைத்தும் மத்திய அரசின் என்சிஆர்பி தகவல் திரட்டில் 2017 முதல் 2022 வரையிலும் 2023 மற்றும் 2024 புள்ளிவிவரங்கள் மாநிலங்களவை அளித்த தகவலில் இருந்தும் எடுக்கப்பட்டவை.
இதையும் படிங்க: பெண்ணுடன் நிர்வாணமாக போட்டோ எடுத்து மிரட்டல்..! ஜோதிடருக்கே விபூதி அடித்த பலே கும்பல்..!