சர்வதேச மகளிர் நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு முழுமையாக பெண் பணியாளர்களை மட்டுமே கொண்ட சிறப்பு ரயில் ஜார்கண்ட் மாநிலத்தில் இயக்கப்பட்டது. தென்கிழக்கு ரயில்வேயின் ராஞ்சி பிரிவின் இந்த முயற்சி பெண்களையும் தேசத்தையும் கட்டி எழுப்புவதில் அவர்களின் பங்களிப்பை கௌரவிப்பதை நோக்கமாகக் கொண்டதாகும்.
அந்த மாநில தலைநகர் ராஞ்சியிலிருந்து டோரி வரை இயக்கப்பட்ட 'மெயின்லைன் எலக்டிரிக் மல்டிபள் யூனிட்' ரயிலை ராஞ்சியின் முதல் பெண் ரயில் ஓட்டுநரான தீபாளி அம்ரிட் இயக்கினார். இந்நிலையில், இன்று (சனிக்கிழமை) காலை 8.50 மணியளவில் ராஞ்சி ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்த ரயிலானது மொத்தம் 14 நிறுத்தங்களைக் கடந்து காலை 11.30 மணியளவில் டோரி ரயில் நிலையத்தை சென்று அடைந்தது.

இந்த ரயிலின் ஓட்டுநர், பயணச்சீட்டு பரிசோதகர், ஆர்.பி.எஃப். அதிகாரிகள் மற்றும் பிற பணியாளர்கள் என அனைவரும் பெண்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 2026-ல் திமுக அரசை மாற்றுவோம்.. மகளிர் தினத்தில் வீடியோவில் தோன்றி விஜய் பேச்சு..!
இதுகுறித்து அந்த ரயிலின் ஓட்டுநர் தீபாளி கூறுகையில், இது வெறும் ஓர் சிறப்பு ரயில் மட்டும் இல்லை, சமூகத்திற்கான செய்தி எனவும் இந்த ரயிலானது கிராமப்புறங்கள் வழியாக செல்லும்போது அங்குள்ள பெற்றோர்கள் தங்களது பெண் குழந்தைகளுக்கு முறையான கல்வியை வழங்க ஊக்குவிப்பதாகவும், அவர்களும் இதுபோன்ற சிறப்புகளில் பங்கெடுக்க முடியும் என அறிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் சர்வதேச மகளிர் நாளன்று இயக்கப்படும் இந்த சிறப்பு ரயிலானது ராஞ்சி ரயில் பிரிவின் பெண் பணியாளர்களை கௌரவிக்கும் விதமாக ஆண்டு தோறும் பின்பற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து கோட்டை வணிக மேலாளர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி நிஷாந்த்குமார் கூறும் போது "இது எங்களுக்கு ஒரு பெருமையான தருணம். ரயிலை இயக்குவதோடு மட்டுமின்றி வழித்தடங்களில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் முன்பதிவு கவுண்டர்களையும் பெண்களே நிர்வகித்து வருகிறார்கள்" என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

மூத்த லோகோ பைலட் கீதா கல்கோ ரயிலை இயக்குவதில் தனது பெருமையை வெளிப்படுத்தினார். ஒவ்வொரு துறையிலும் பெண்கள் முன்னேறி வருவதாக பேட்டியின் போது அவர் குறிப்பிட்டார்.
ஜோதி குஜூர், பெண்களை இன்னும் பலவீனமாக கருதுபவர்களுக்கு ஒரு செய்தியை அனுப்பும் நோக்கத்தில் இந்த நாளின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்தார். பெண்களின் சக்தி எல்லா இடங்களிலும் தெளிவாக தெரிகிறது என்றும் அவர் பெருமையுடன் கூறினார். அனைத்து பெண் குழுவினரின் இந்த முயற்சி அவர்களின் திறன்கள் மற்றும் பல்வேறு துறைகளில் அவர்கள் அடைந்துள்ள முன்னேற்றத்தை நினைவூட்டுகிறது.
இதையும் படிங்க: ரயிலில் பெண்ணிடம் சில்மிஷம்.. உடனே தகவல் கொடுத்த சிங்கப்பெண்.. அடித்து மண்டையை உடைத்த உறவினர்கள்..!