கடந்த 6-ந் தேதி தொழிலாளர்கள் சிலர் நிலக்கரியை வெட்டி எடுத்துக் கொண்டிருக்கும் போது திடீரென வெள்ளம் புகுந்தது. 300 அடி ஆழம் கொண்ட சுரங்கத்தில் 100 அடி உயரம் அளவுக்கு நீர் தேங்கியதால் தொழிலாளர்கள் 9 பேர் அதில் சிக்கிக் கொண்டனர்.

தகவல் அறிந்த தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில பேரிடர் மீட்பு படை, அசாம் ரைபிள்ஸ் படையினர் மற்றும் ராணுவத்தினர் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் நீருக்குள் மூழ்கி 3 பேர் உயிரிழந்து விட்டதாக தகவல்கள் வெளியாகின. எஞ்சிய 6 தொழிலாளர்கள் மீட்கும் பணிகள் 2 -வது நாளாக முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலக்கரி சுரங்கம் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்ததாகவும் தடைசெய்யப்பட்ட RAT HOLE முறையில் தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் சென்றுள்ளதாகவும் அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா கூறியுள்ளார். இதுதொடர்பாக புனிஷ் நுனிஷா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். விசாகட்டினத்தில் இருந்து கடற்படையினர் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுரங்கத்தில் தேங்கியுள்ள நீரில் நீந்தி மீட்கும் பணிகளில் பயிற்சி பெற்றவர்கள் என்றும் ஹிமந்தா தனது எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: வெள்ளம் சூழ்ந்த நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய 12 தொழிலாளர்கள்: 3 பேர் பலி; மீட்பு பணியில் ராணுவம் தீவிரம்..

வடகிழக்கு மாநிலங்கள் மலைகளால் சூழப்பட்டவையாகும். இதனால் அரசால் இயக்கப்படும் சுரங்கங்களைத் தாண்டி தனிமனிதர்களால் சுரங்கம் வெட்டி நிலக்கரி எடுக்குப்படுபவை அன்றாட நிகழ்வாக உள்ளன. அதுவும் ரேட் ஹோல் என்ற முறையில் ஒரு மனிதன் மட்டுமே செல்லக்கூடிய அளவில் செங்குத்தாக பள்ளம் வெட்டி அதன்வழியே நுழைந்து நிலக்கரியை எடுப்பது உயிரை துறப்பதற்கு சமமான செயல். ஆனாலும் பலர் அவ்வாறு ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற நிகழ்வுகளால் அடிக்கடி விபத்துகள் நேரிடுவதும், அதன்பின்னர் அரசுத்துறைகள் இணைந்து மீட்பு பணிகளை மேற்கொள்வதும் அங்கு வாடிக்கையாக நிகழ்ந்து வருகிறது.
2018-ம் ஆண்டு மேகாலயாவின் க்சான் என்ற இடத்தில் நிகழ்ந்த சுரங்க விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். 2022-ம் ஆண்டு அஸ்ஸாமின் தின்சுக்யா என்ற இடத்தில் நிலக்கரி சுரங்கத்திற்குள் விஷவாயு கசிந்து 3 பேர் உயிரிழந்தனர். கடந்த ஆண்டு நாகாலாந்து மாநிலத்தின் வோகா என்ற இடத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
இந்தமுறை ஏற்கனவே 3 பேர் உயிரிழந்து விட்டநிலையில் எஞ்சியவர்களையாவது மீட்கும் பணிகள் முழுவீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: 2 மாதங்கள் இரவே இல்லை... கிரீன்லாந்திலன் தங்கம், யுரேனியத்தை கண் வைத்த சீனா..! பிடரியில் அடித்து ஓடவிட்ட அமெரிக்கா..!