விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அங்காளம்மன் கோவில்களில் மயானக் கொள்ளை விழா அமாவாசை முதல் விமர்சையாக நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக விழுப்புரம் வழுத ரெட்டியில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலிலும் மயானகொள்ளை நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடந்தது. இதையொட்டி, விழுப்புரம் வழுதரெட்டியில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு நேற்று காலை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. மாலை 3:00 மணிக்கு பக்தருக்கு அம்மன் வேடமணியப்பட்டு சூரனை வதம் செய்யும் வழி அமைக்கப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட அம்மன், ஊர்வலமாக பிராந்தி கம்பெனி பின்புறம் உள்ள மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்காளம்மன் மீது பக்தி கொண்ட பக்தர்கள், அம்மனின் ஆக்ரோஷமான ரத்த காளி, சிவப்பு காளி, கருப்பு காளி என பல ஆக்ரோஷமான உருவங்களை வேடங்களா அணிந்து, நடனமாடினர். நேர்த்திக்கடனாக வாயில், உயிருள்ள கோழிகளை கடித்து ஆவேசத்தை வெளிப்படுத்தினர். மேளதாளங்கள் முழங்க உற்சாகமாக நடனமாடிக் கொண்டே பக்தர்கள் மயானத்தை வந்து அடைந்தனர்.
இதையும் படிங்க: திரௌபதி அம்மன் கோயிலில் பிரச்சனை ஏற்படுத்த முயற்சித்தால் அவ்வளவுதான்.... சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை..!

மேலும் விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் பயிரிடப்பட்டு விளைவித்த தானியங்களையும், நாணயங்களையும், கொழுக்கட்டை, காய்கறிகள், பழ வகைகள் உள்ளிட்டவைகளை மயானத்தில் படைத்து பின்பு பக்தர்கள் மீது வாரி இறைத்தனர். இந்த பொருட்களை தங்கள் வீடுகளுக்கு எடுத்துச் சென்றால் பல்வேறு நன்மைகள் உண்டாகும் என்ற நம்பிக்கை பக்தர்கள் இடையே நிலவுகிறது. இந்நிலையில் நன்மை உண்டாக வேண்டும் என்ற நோக்கில் பக்தர்கள் ஏராளமானோர் வாரி இறைத்த பொருட்களை ஆர்வமுடன் எடுத்துச் சென்றனர்.

இந்நிலையில் வழுதரெட்டி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலின் மயானக் கொள்ளை திருவிழாவை வேடிக்கை பார்க்க வந்த இருதரப்பு இளைஞர்கள் சிலர் திடீரென மோதிக்கொண்ட நிகழ்வு அங்கிருந்த பக்தர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கட்டையாலும், அம்மன் வேடமிட்டவர் வைத்திருந்த அட்டை கத்திகளாலும் ஒருவருக்கொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதனால் மயான கொள்ளை திருவிழா நடந்த அந்த இடமே போர்க்களம் போல காட்சி அளித்தது. இதில் பலருக்கு காயம் ஏற்பட்டது. ரத்தம் சொட்டச் சொட்ட இளைஞர்கள் மீண்டும் மீண்டும் மோதிக்கொண்டனர். இதனால் அந்த பகுதியே பயத்தில் உறைந்தது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர்.

போலீஸாரும் அந்த பகுதியில் அதிகப்படியாக குவிக்கப்பட்டனர். போதை இளைஞர்கள் இரண்டு தரப்பாக மயானக்கொள்ளை திருவிழாவில் மோதிக்கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது
இதையும் படிங்க: எக்ஸ் தளத்தில் எகிறி அடிக்கும் அரசியல் சண்டை..! கெட்அவுட் ஸ்டாலினுக்கு மேலாக ட்ரெண்டாகும் தமிழ் வாழ்க..!