'தலைவா.. நீங்க அரசியலுக்கு வரீங்களோ இல்லையோ... ஆனால் நிச்சயம் ரசிகர்களுக்காக ஒரு மாநாடு நடத்துங்க' என்று கேட்டுக் கொண்டதோடு 2016ம் ஆண்டே 'மனிதநேயம் மலரட்டும்' என்கிற மாநாட்டை நடத்திக் காட்டியவர் சோளிஙகர் ரவி. வேலூர் மாவட்டம், சோளிங்கர் நகரில் நடந்த அந்த மாநாடு 20 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட மேடை, ஏராளமான திரைத்துறை விவிஐபிகள் பங்கேற்க வைத்தார் சோளிங்கர் ரவி. ரஜினியின் 50 ஆண்டுகால வெறித்தனமான ரசிகர். ஆன்மீகத்திலும் ரஜினியை பின்பற்றுபவர்.
அந்தப்பகுதியில், நடக்கும் அனைத்து சுக துக்க நிகழ்வுகளிலும் ரஜி ரசிகராக பங்கேற்று வந்தவர். ரஜினியின் பிறந்தநாள், அவரது திருமண நாள், படம் ரிலீசாகும் நாட்களில் சோளிங்கர் ரவி விழா நடத்தி பிரமிக்க வைத்து விடுவார்.

ரஜினி அரசியலுக்கு வருவரா? வரமாட்டாரா? என தெளிவில்லாத நிலைமையிலும், சோளிங்கர் தொகுதியில் சுமார் முப்பதாயிரம் வாக்குகள் ரஜினி மக்கள் மன்றத்திடம் இருந்தது என்றால் அதற்கு காரணமானவர் சோளிங்கர் ரவி மட்டுமே. தமிழகத்திலேயே, இந்தத் தொகுதியில் மட்டும்தான் ரஜினி ரசிகர்களின் வாக்குவங்கி அதிகம். அதற்குக் காரணம், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றச் செயலாளர் சோளிங்கர் ரவி, என்பதுதான்.
இதையும் படிங்க: நாளை வெளியாகிறது தவெக மாவட்ட செயலாளர்கள் பட்டியல்... வெளியிடுவது யார் தெரியுமா?

ரஜினி மக்கள் மன்றத்தின் கட்டமைப்பு இந்தத் தொகுதியில் மிக வலுவாக இப்போதும் இருக்கிறது. ரஜினி அரசியலுக்கு வருவார் என்ற நம்பிக்கையில், டிஜிட்டல் இணையப் படையை ஏற்படுத்தி சோஷியல் மீடியாவில் தீவிரமாகக் களமாடி வந்தனர் மன்ற நிர்வாகிகள். ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப் போன்ற இணைய தளங்களில் ரஜினி குறித்த பதிவுகளை ‘டிரெண்டிங்’ செய்யும் வேலைகளிலும் தீவிரமாக ஈடுபட்டனர். கடைசிக் கட்டத்தில் ரஜினி, `அரசியலுக்கு வர மாட்டேன்’ என்று அறிவித்தது மன்றத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
தமிழகத்திலேயே, முதன்முதலில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில்தான் மன்ற நிர்வாகிகளை நியமனம் செய்தார் ரஜினி. சோளிங்கரைச் சேர்ந்த ரவிதான் முதல் மாவட்டச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். அதற்கேற்ப, மற்ற மாவட்டங்களில் இல்லாத அளவுக்கு ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் களப்பணியும் தீவிரமாக இருந்தன. இம்மாவட்டத்தில் மட்டும் ஒன்றரை லட்சம் உறுப்பினர்கள் மன்றத்தில் சேர்க்கப்பட்டனர். கிராமப்புறங்களில் பெண் நிர்வாகிகளையும் நியமித்து கட்டமைப்புகளைப் பலப்படுத்தியிருந்தனர்.

தொகுதியில் 100 சதவிகிதம் பூத் கமிட்டிகளையும் அமைத்து தேர்தலுக்குத் தயாராகிவந்தனர். ரஜினி அரசியலுக்கு வந்திருந்தால், ரவி, சோளிங்கர் தொகுதியிலும் போட்டியிட்டிருக்கலாம். அந்த அளவுக்கு சோளிங்கர் தொகுதியை ரஜினி சென்டிமென்ட்டாகப் பார்த்ததாகவும் மன்ற நிர்வாகிகள் சொல்கிறார்கள். ரஜினியைத் தவிர்த்து மன்றத்தின் மாவட்டச் செயலாளர் ரவி சுயேச்சையாகக் களமிறங்கினாலும் பிரதான கட்சிகளுக்கு இப்போதும் பாதிப்பு ஏற்படும்.
மக்கள் மத்தியிலும் ரவிக்கு தனிப்பட்ட செல்வாக்கு இருக்கிறது. ஆனாலும் அவர் சுயேச்சையாகப் போட்டியிடுவதை விரும்பவில்லை. மன்றப் பணிகளை மட்டுமே தொடர்ந்து செய்துவருகிறார். ரஜினி ரசிகர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக அரசியல் கட்சிகள் மன்றத்தின் மாவட்டச் செயலாளர் ரவியை அணுகி காய்நகர்த்தி வந்தன. இப்போதும் வருகின்றனர். அதற்கு ரவி அசைந்து கொடுத்ததே இல்லை. ரஜினி மக்கள் மன்றத்தினர் மற்றும் ரசிகர்களின் குடும்ப வாக்குகள் எந்தக் கட்சிக்கு என்பதையே தீர்மானிப்பவர் இந்த சோளிங்கர் ரவி. 
அப்படிப்பட்ட, சோளிங்கர் ரவி, இப்போது ''கனவுகளை சுமந்த இடத்தை விட்டு கனத்த மனதுடன் வெளியேறுகிறேன்..'' என அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர் அடுத்து விஜயின் தவெக-வில் இணைகிறாரா? என்கிற கேள்விகளை ஏற்படுத்துகிறது.
இதையும் படிங்க: எப்போது முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு..? நாள் குறித்த மத்திய அரசு.!