சிவகாசி அருகே ஆலமரத்துப்பட்டி கிராமத்தில் அதிமுக சார்பில் பாக( பூத்) செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் நியமனம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தற்போது தமிழ்நாட்டில் ஆட்சியிலுள்ள திமுக அன்றாடம் மொழி, இனம், ஜாதி என ஏதாவது ஒரு பிரச்சனையை கிளப்பிக் கொண்டேயிருக்கிறது. தொடர்ந்து மத்திய அரசுடன் மோதல் போக்கையே கடைபிடித்து வருகிறது. திமுக மத்திய அரசை வம்புக்கு இழுப்பதையே வேலையாக கொண்டுள்ளது.

திமுக அரசு தமிழ்நாட்டிற்கு எதுவுமே செய்யவில்லை. மக்கள் நலனில் அக்கறை கொள்ளாமல் மத்திய அரசுடன் எந்த நேரமும் மோதல் போக்கையே கடைப்பிடித்து தமிழகத்திற்குண்டான நிதியை முறையாக கேட்டுப் பெறாமலிருப்பதால் பல நலத்திட்ட பணிகள் முழுமையடையாமல் பாதியிலேயே நிற்கிறது. ஒரு சாமர்த்தியமான ராஜதந்திர முதல்வராக ஸ்டாலின் இருக்கவில்லை. அவர் ஒரு வழிப்போக்கன் போல பிரதமரிடமும், மத்திய அமைச்சர்களிடமும் சண்டையிட்டு மத்திய அரசையே குறை கூறி வருகிறார்.
தமிழ் என்ற போர்வையில் மொழி பிரச்சனையை தூண்டி விட்டு மற்ற மொழி பேசுபவர்களை இழிவாக பேசுவது, சமுதாய ரீதியாக சண்டை போன்ற பிரச்சனைகள் வருவதற்கு காரணமாக இருப்பது, போதை கலாச்சாரங்கள் பெருகி வருவதை தடுக்காமல் இருப்பது என பல்வேறு சீரழிவுகளை இன்றைய தமிழ்நாடு சந்திப்பதற்கு காரணம் திமுக அரசின் நிலையற்ற தன்மையும், தைரிய மற்ற போக்கும், அனுசரித்து செல்லாததின் விளைவுதான். இதற்கான காரணம் கேட்டால் பாஜகவை எதிர்க்கிறோம் என்கின்றனர். பாஜக டெல்லியை ஆள்கிறது. திமுகவுக்கு தமிழகத்தை ஆளுகின்ற உரிமையை மக்கள் கொடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: இனி எதிர்பாராத ட்விஸ்டுதான்.. மாதாமாதம் கட்சிகள் வந்து அதிமுக கூட்டணியில் சேரும்.. மாஜி அமைச்சர் கணிப்பு.!
தமிழகத்திற்கு கிடைக்கக்கூடிய பெறக்கூடிய நன்மைகளை வாங்கிக் கொடுக்கும் இடத்தில் திமுக உள்ளது. இதனைக் கூட சரிவர செய்யாமல், ஒதுக்கிய பணத்தை முறையாக செலவிடாமல் திமுக அரசு உள்ளது. மத்திய அரசு கொடுக்கும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முறையாக தமிழக அரசு செலவிடவில்லை என ஒரு தணிக்கை அறிக்கை கூறுகிறது. ஆதிதிராவிட மக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை கூட செலவழிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட செயல்களை எல்லாம் செய்துவிட்டு பழியை மத்திய அரசு மீது போட்டு விட்டு திமுக தலைமையிலான ஸ்டாலின் அரசு தப்பிக்க பார்க்கிறது.

இதனை தடுக்க, ஒடுக்க வேண்டும் என்றால் திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். இளைஞர்களுக்கும், படித்தவர்களுக்கும் நல்ல வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற கவலை திமுக அரசுக்கு இல்லை. பல லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு தருவதாக சொல்லி வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த திமுக பத்தாயிரம் பேருக்கு கூட வேலை வாய்ப்பு வழங்கவில்லை. நெசவாளர்கள் கஷ்டப்படுகின்றனர். விவசாயிகள் துன்பப்படுகின்றனர். அனைத்து விலை வாசிகள் கூடுதலாகி, எல்லா வரியிரினங்கள் உயர்ந்துள்ளது.

நியாய விலை கடைகளில் அரிசி, பருப்பு, மண்ணெண்ணெய் இல்லை. இந்த நிலைமைக்கு திமுக அரசின் சித்து விளையாட்டு தான் காரணம். திமுகவின் நிர்வாக திறமை இல்லாத காரணத்தால் ரேஷன் கடைகளில் அரிசி கிடைக்காமல் மக்கள் கஷ்டப்படுகின்ற நிலைமை உள்ளது. எல்லா விதங்களிலும் திமுக அரசு தோல்வி யடைந்து விட்டது. திமுக மூழ்கும் கப்பலாக இருப்பதால் மக்கள் விழித்துக் கொள்ள வேண்டும். மூழ்கும் கப்பலிலிருந்து தப்பி அதிமுக கப்பலில் ஏறிக் கொண்டால் பத்திரமாக பாதுகாப்பான பயணத்தை தொடர்ந்து வெற்றியடைய செய்வோம் என்றார்.
இதையும் படிங்க: கே.டி.ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கில் மேல்விசாரணை கோரிய மனு.. திரும்ப பெற்றுக் கொள்வதாக மனுதாரர் நீதிமன்றத்தில் தகவல்..!