சேலம் அருகே தாரமங்கலம் பகுதியில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமியை மட்டுமே பேச்சாளர் புகழ்ந்து பேசியதால் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பல்பாக்கி கிருஷ்ணன் பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு நிலவியது.
சேலம் மாவட்டம் தாரமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராமிரெட்டிபட்டி கிராமம் அம்மன் கோவில் அருகில் அதிமுக சார்பில் அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் மணிமுத்து தலைமையில் முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய தலைமை கழக பேச்சாளர் பேராவூரணி திலீபன் என்பவர் பேசுகையில் மறைந்த செல்வி ஜெயலலிதா அவர்களை பற்றியே அதிகம் பேசாமல், எடப்பாடி பழனிச்சாமியை பற்றி புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார்.
இதையும் படிங்க: இது அதிமுக நிகழ்ச்சி அல்ல... செங்கோட்டையனுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிவடி....!
அப்போது மேடையில் அமர்ந்திருந்த அதிமுக ஓமலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பல்பாக்கிகிருஷ்ணன் இதுகுறித்து சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் அவர்களிடம் , அம்மாவை பற்றி மட்டும் பேச சொல்லுங்கள் என சொல்லியும் , மீண்டும் மீண்டும் எடப்பாடி பழனிச்சாமியை புகழ்ந்து பேசி வந்ததால் , மேடையில் இருக்கையில் இருந்து எழுந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பல்பாக்கி கிருஷ்ணன் , ஜெயலலிதாவை பேசுவதை விட்டுவிட்டு பழனிச்சாமியை புகழ்ந்து பேசுகிறாயே எனக் கூறிவிட்டு , மேடையில் இருந்து கீழே இறங்கி விடுவிடுவென சென்று விட்டார் . கட்சியின் தலைமைக் கழக பேச்சாளர் பேசிக் கொண்டிருந்த போதே முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், பல்பாக்கி கிருஷ்ணன் ஆவேசமாக , எடப்பாடியை மட்டுமே புகழ்ந்து பேசாதே என கூறிவிட்டு சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் ஓமலூர் சட்டமன்ற உறுப்பினர் பல்பாக்கி கிருஷ்ணன், எம். ஜி.ஆர் மன்ற புறநகர் மாவட்ட செயலாளர் ஆவார்.
இதையும் படிங்க: அதிமுகவில் எடப்பாடியாருக்கு எதிராக போர்க்கொடி..!அதிருப்தியில் செங்கோட்டையன்: ஆதரவாக களமிறங்கிய டிடிவி.தினகரன்..!