கடந்த பிப்ரவரி மாதம் 9ம் தேதி அன்னூரில் நடைபெற்ற அத்திகடவு அவினாசி திட்ட விவசாயிகள் சார்பில் எடப்பாடி பழனிச்சாமிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் எம்,ஜி.ஆர்., ஜெயலலிதா படங்கள் இடம் பெறவில்லை என்று நிகழ்ச்சியை முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் புறக்கணித்ததை தொடர்ந்து, எடப்பாடி பழனிச்சாமிக்கும், செங்கோட்டையனுக்கும் இடையே மோதல் வெளிப்படையானது.

அதைத்தொடர்ந்து செங்கோட்டையன் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் எடப்பாடி போட்டோவிற்கு இணையாக செங்கோட்டையன் படமும் இடம் பிடித்தது.
அதே போன்று எடப்பாடி பழனிச்சாமி குறித்தும், அவரது 4 ஆண்டு கால ஆட்சி குறித்தும் பேசுவதை தவிர்த்து வந்தார். அதைத்தொடர்ந்து நடைபெற்ற எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழாவில் பொதுச்செயலாளர் என்று மட்டும் பேசி வந்தார். மேலும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் டெல்லி பயணம் மேற்கொண்டதும், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்ததும் அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: முதலமைச்சர் ஆகிட்டதா நினைப்பா? - எடப்பாடி பழனிசாமியை எச்சரித்த துக்ளக் ரமேஷ்!

அடுத்த அதிமுக பொதுச்செயலாளர் செங்கோட்டையன் தான் என பேச்சு கிளம்பியது. இதற்கு பாஜக தலைமை ஒத்துழைப்பு தரவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனிடையே, அதிமுக - பாஜக கூட்டணி உறுதியானதை அடுத்து, எடப்பாடி பழனிசாமிக்குப் பதிலாக செங்கோட்டையன் அதிமுகவின் புதிய பொதுச்செயலாளராக பொறுப்பேற்க போகிறார் என்ற பேச்சுக்கள் முடிவுக்கு வந்தன.

இடையில் செங்கோட்டையனை சமாதானப்படுத்த எடப்பாடி பழனிசாமி முயன்று வருவதாகவும், சில மூத்த அமைச்சர்களைக் கொண்டு அதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டது. இதனால் எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன் இடையிலான பிரச்சனை முடிவுக்கு வந்ததாக கருதப்பட்டது. ஆனால் தற்போது அதிமுக ஆர்ப்பாட்டத்தில் மீண்டும் எடப்பாடி பழனிசாமி பெயரை செங்கோட்டையன் தவிர்த்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோட்டில் அதிமுக ஆர்பாட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் "எங்கள் தங்கம் எடப்பாடி ஆட்சி அமைக்கவே" என தொண்டர்கள் முழங்கிய போது அமைதி காத்தார். செய்தியாளர்கள் சந்திப்பில் பாஜகவுடனான கூட்டணிக்கு மழுப்பலாக பதிலளித்த அவர், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆசியுடன் அதிமுக ஆட்சியை அமைப்போம் எனக்கூறியதோடு வழக்கம் போல் எடப்பாடி பெயரை தவிர்த்தது அதிமுகவினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அமித் ஷா கொடுத்த அசைன்மெண்ட்; விஜய், சீமானுக்கு பறந்த தூது.. எடப்பாடிக்கு இப்படியொரு நிலைமையா?