தமிழ்நாட்டின் பல டாஸ்மாக் மதுபான கடைகள் முன்பாக பாஜகவினர் முதல்வர் மு.க.ஸ்டாலின் படத்தை மட்டும் ஒட்டினால் 2026ல் கூட்டணி அமைப்பதில் சிக்கல் ஏற்படும் என மதுக்குடிப்போர் விழிப்புணர்வு சங்கத் தலைவர் செல்லப்பாண்டியன் எச்சரித்துள்ளார்.
தமிழ்நாட்டில் டாஸ்மாக் நிறுவனத்தின் மதுபான கொள்முதல், விற்பனையில் முறைகேடு நடப்பதாக கூறி மதுவிற்பனை கடைகள் முன்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் படத்தை ஒட்டும் போராட்டத்தை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்தார். இதனையடுத்து தமிழ்நாட்டின் பல டாஸ்மாக் மதுபான கடைகள் முன்பாக பாஜகவினர் முதல்வர் மு.க.ஸ்டாலின் படத்தை ஒட்டினர். டாஸ்மாக் கடைகள் முன்பு முதல்வர் ஸ்டாலின் படத்தை ஒட்டியதாக பாஜகவினர் ஆங்காங்கே கைதும் செய்யப்பட்டனர்.

பாஜகவினருக்கு பதிலடி தரும் வகையில் அதே டாஸ்மாக் கடைகளில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சாட்டையால் அடித்துக் கொள்ளும் படத்துடன், இந்த கடையில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்யப்படுவதில்லை என்ற வாசகத்துடன் போட்டோக்களை ஒட்டினர். இதனால் டாஸ்மாக் கடைகள் முன்பாக பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பொது கழிப்பிடங்களிலும் மத்திய பாஜக அரசுக்கு எதிராக, தமிழ்நாட்டுக்கு நிதி தர மறுப்பதற்கு கண்டனம் தெரிவிக்கும் படங்களையும் திமுகவினர் ஒட்டினர்.
இதையும் படிங்க: ஸ்டாலின், உதயநிதியின் தூக்கத்தை கெடுக்கும் பாஜக..! கேப் விடாமல் அடித்து ஆடும் அரசியல்..!

இந்நிலையில், மது குடிப்போர் விழிப்புணர்வு சங்க தலைவர் செல்லப்பாண்டியன், தனது அறிக்கையில், ''அண்ணாமலையாரே... எடப்பாடியாரின் கோபத்தை தூண்டாதீர். டாஸ்மாக் கடைகளில் ஸ்டாலின் படத்தை வைத்தால் 1983-ல் டாஸ்மாக்கை துவங்கிய எம்.ஜி.ஆர் படம் எங்கே என கேட்பார் எடப்பாடியார்! 29.11.2003-ல் சில்லறை விற்பனை துவங்கிய ஜெ.ஜெயலலிதாவின் படம் ஏன் வைக்கவில்லை என எடப்பாடியார் கேட்பார். 2026-ல் கூட்டணி அமையாது எச்சரிக்கை'' எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் மதுவிற்பனையை அரசு நிறுவனமான டாஸ்மாக் மேற்கொண்டு வருகிறது. டாஸ்மாக் மது கொள்முதல், விற்பனையில் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக முறைகேடு நடந்துள்ளது என்பது அமலாக்கத்துறையின் புகார். டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி இந்த அறிக்கையை வெளியிட்டனர். ஆனால் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி இதனை திட்டவட்டமாக மறுத்தார். தமிழ்நாடு பாஜகவோ, ரூ.1,000 கோடி ஊழல் நடந்துள்ளதால் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவதாக அறிவித்தது. இதற்கு பதிலடியாக தமிழகத்தின் பல பகுதிகளில் திமுகவினரும் போட்டி போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: எங்க சாதனைய பார்த்து சாட்டையால அடிச்சுகிட்டாங்க... அண்ணாமலையை சீண்டிய செந்தில் பாலாஜி!!