''நான் டெல்லியில் பேசும்போது, தொண்டனாக செயல்படவும் தயார் எனத் தெரிவித்துள்ளேன். அதன் பொருளையும் நீங்கள் நன்றாக உணர்ந்து கொள்ளுங்கள்'' என அதிமுக-பாஜக கூட்டணி குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை சூசகமாக தெரிவித்துள்ளார்.

டெல்லி சென்று பாஜக தலைவர்களை சந்தித்து கோவை திரும்பிய அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், '' எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க அனைத்து உரிமையும் உண்டு. தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசியதில் எந்த தவறும் இல்லை. அமித் ஷா, நிர்மலா சீதாராமனை செங்கோட்டையன் சந்தித்து இருப்பதில் தவறு இல்லை. ரகசிய விசிட் கிடையாது. கூட்டணி விஷயத்தில் அமித் ஷாவின் கருத்தை இறுதி கருத்தாக எடுத்துக் கொள்ளலாம். திரைமறைவில் யாரையும் சந்தித்து பேச வேண்டிய அவசியம் பாஜகவிற்கு இல்லை. டெல்லியில் அமர்ந்து தமிழக அரசியலை என்றைக்கும் பாஜக கட்டுப்படுத்தாது.
இதையும் படிங்க: மொழி, அரசியல் உரிமைகளை காக்க வேண்டும்.. முதல்வர் ஸ்டாலின், விஜய் யுகாதி பண்டிகை வாழ்த்து..!

அதிமுக உட்கட்சியை விவகாரத்தில் தலையிட வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை.இன்னொரு கட்சியை அழித்துதான் வளர வேண்டும் என்ற எந்தவொரு அவசியமும் பாஜகவுக்கு இல்லை. சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் கூட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பெரும் ஆதரவுடன் முதன்மை பெறவில்லை. மோசமான முதல்வராக இருந்தால் கூட அவருக்கு 43 சதவீதம் ஆதரவு கருத்து கணிப்பில் இருக்கும். நல்ல முதலமைச்சராக இருந்தால் 60 சதவீதம் போவார்கள். ஆனால் அதைவிட மு.க.ஸ்டாலினுக்கு குறைவாகவே 4ல் ஒரு பங்கே அவருக்கு ஆதரவு உள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. 4-ல் 3 பேர் வேண்டாம் என்கிறார்கள் ஒருத்தர் மட்டுமே வேண்டும் என்கிறார். எங்களுடைய கள ஆய்வும் அதைத்தான் சொல்கிறது.

எல்லாப்பகுதியிலும் மக்கள் ஒரே மாதிரி வாக்களிக்க மாட்டார்கள். தென் தமிழகம் வேறு, கொங்கு பகுதி வேறு, மத்திய மண்டலம் வேறு. டெல்டா பகுதி வேறு. சென்னையை சுற்றி இருக்கக்கூடிய 36 தொகுதிகள் வேறு. மதுரைக்கு கீழ்எடுத்துக் கொண்டீர்கள் என்றால் 60 தொகுதிகள் இருக்கிறது. அங்கு ஃபெர்பார்மன்ஸ் வேறு மாதிரி இருக்கிறது. கூட்டணியைப் பற்றி எந்த வார்த்தையும் நான் பேச விரும்பவில்லை.ஆகையால் அமித் ஷாவின் கருத்தை இந்த விஷயத்தில் இறுதிக் கருத்தாக நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

என்னைப்பொறுத்தவரை தமிழக நலன் முக்கியம். தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி தங்கு தடையின்றி இருக்க வேண்டும் என்பதில் நான் தெள்ளத்தெளிவாக இருக்கிறேன். எனக்கு எந்தவொரு தலைவர் மீதோ, எந்தவொரு கட்சியின் மீதோ கோபம் கிடையாது. யாருக்கும் எதிரானவன் கிடையாது. பாஜகவின் வளர்ச்சி எனக்கு முதன்மை. தமிழகத்தின் நலன் அதைவிட முதன்மை.
நான் அரசியலுக்காக வந்திருப்பது பலருக்காக அல்ல. மக்களுக்கு பணியாற்றவும், பாஜகவுக்கு உழைக்கவும் அரசியலுக்கு வந்திருக்கிறேன். யாரையும் கடந்த காலங்களில் தவறாக விமர்சித்ததில்லை. அவர்கள் சொன்ன கருத்துகளால் பதில் சொல்லி இருக்கிறேன்.எனது நிலைப்பாட்டில் என்றும் மாற்றமில்லை. மாற்றி மாற்றி பேசுவது எனக்கு பழக்கம் கிடையாது.

எனது கருத்தில் இருந்து பின் வாங்க மாட்டேன். கருத்துகளை கருத்துகளாக தான் எதிர்கொள்ள வேண்டும். நான் டெல்லியில் பேசும்போது, தொண்டனாக செயல்படவும் தயார் எனத் தெரிவித்துள்ளேன். அதன் பொருளையும் நீங்கள் நன்றாக உணர்ந்து கொள்ளுங்கள். இங்குள்ள சூழல்களை நான் தலைவர்களிடம் சொல்லி விட்டு வந்திருக்கிறேன். அதன் பிறகு தலைவர்கள் கூட்டணி குறித்து முடிவெடுப்பார்கள்'' எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்றுக்கொள்வோம்.. கே.பி. முனுசாமி தடாலடியாக அறிவிப்பு.!!