தமிழ்நாட்டில் அரசு மதுக்கடைகளை நடத்தும் டாஸ்மாக் நிறுவனத்திலும், மது ஆலைகளிலும் நடத்தப்பட்ட சமீபத்தில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். 3 நாட்கள் நீடித்த இந்த சோதனைகளில் ரூ.1,000 கோடி அளவுக்கு ஊழல் உள்ளிட்ட பல்வேறு முறைகேடு நடைபெற்றிருப்பதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது. அது குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும், மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக ரூ.1,000 கோடி டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து, தமிழக பாஜ சார்பில் இன்று சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலக முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பாஜகவைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பலர் இன்று காலை முதல் வீட்டு காவலில் வைக்கப்பட்டு உள்ளனர்.
பாஜக மூத்த தலைவர்கள் தமிழிசை சவுந்தரராஜன், எச். ராஜா மற்றும் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை ஆகியோரின் வீடுகளுக்கு முன் போலீசார் குவிக்கப்பட்டனர். இதற்கு தமிழக பாஜ தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். பாஜ மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ;
இதையும் படிங்க: “எத்தனை நாளுக்கு என்னை ஜெயில்ல வைக்க முடியும்”... கைதான அண்ணாமலை ஆவேசம்...!

திமுக அரசின் ரூ.1,000 கோடி டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து, தமிழக பாஜ சார்பில், இன்று சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம் முற்றுகைப் போராட்டம் அறிவித்திருந்தோம். தொடைநடுங்கி திமுக அரசு, தமிழக பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் கவர்னருமான, தமிழிசை சவுந்தர்ராஜன், மாநிலச் செயலாளர் வினோத் பி. செல்வம் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகளைப் போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது என, வீட்டுச் சிறையில் வைத்திருக்கிறது. பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பசைபோட்டு ஒட்டியது போல இருக்கும் ஆட்களைக் கொண்டு, கீழ்மட்டத்தில் இருக்கும் அதிகாரிகளை உங்கள் ஏவலுக்குப் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறீர்கள்.

ஜனநாயக ரீதியாகப் போராட்டம் அறிவித்து, முற்றுகை தேதியை முன்னரே அறிவித்ததால்தானே, உங்களால் இதுபோன்ற கோழைத்தனமான நடவடிக்கைகளில் ஈடுபட முடிகிறது? தேதியே அறிவிக்காமல், திடீரென்று ஓருநாள், நாங்கள் போராட்டத்தை முன்னெடுத்தால் உங்களால் என்ன செய்ய முடியும்? என அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். இதேபோல் பாஜ மூத்த தலைவர்களில் ஒருவரான ஹெச். ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

டாஸ்மாக் ஊழலை கண்டித்து பாஜக சார்பில் நடைபெற உள்ள முற்றுகை போராட்டத்தில் கலந்த கொள்ள புறப்பட்ட தமிழக பாஜ மாநில செயலாளர் வினோத் பி செல்வம், வீட்டிற்கு சென்று தடுப்புக் காவலில் கைது செய்துள்ளது தமிழக காவல்துறை..!! மேலும் தமிழக பாஜகவின் முன்னாள் மாநில தலைவரும், முன்னாள் கவர்னருமான தமிழிசை சவுந்தர்ராஜனை வீட்டுக்காவலில் வைத்திருக்கிறது தமிழக காவல்துறை. சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் சமூக விரோதிகள் சர்வ சாதாரணமாக நடமாடும் தமிழகத்தில் மக்கள் பிரச்சனைகளுக்காக போராடும் பாஜக நிர்வாகிகளை மட்டும் திட்டமிட்டு கைது செய்யும் தமிழக காவல்துறையின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தில் நடப்பது மக்களுக்கான ஆட்சியா? மதுபான கொள்முதல் ஊழல் மாஃபியாக்களுக்கான ஆட்சியா? டாஸ்மாக் மதுபான ஊழலை கண்டித்து நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்க பாஜகவினருக்கு தடை விதித்து தடுப்புக் காவலில் கைது செய்வது திராவிட மாடல் அரசு மக்களை விட மதுபான விற்பனைக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் அளிக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது எனவும் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தொடைநடுங்கி திமுக அரசு... அண்ணாமலை ஆவேசம்...!