பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலையில் சென்னையில் படுகொலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி கட்சியில் இணைக்கப்பட்டு, அவருக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியும் வழங்கப்பட்டது. இந்நிலையில் இனி அவர் கட்சி பணிகளில் ஈடுபட மாட்டார் என்று பகுஜன் சமாஜ் கட்சி அறிவித்திருக்கிறது.

பொற்கொடி இனி குடும்பத்தை மட்டுமே கவனிப்பார் என்றும், தமிழ்நாடு மாநில ஆனந்தன் தலைமையில் தொண்டர்கள் பொறுப்பாளர்கள் செயல்பட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வந்த பொற்கொடிக்கும், தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆனந்திற்கும் இடையே நீரு பூத்த நெருப்பாக பிரச்சனை இருந்து வந்துள்ளது.

ஆனந்த் ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்களை தொடர்ந்து கட்சியில் இருந்து நீக்கி வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் தான் கடந்த வாரம் பகுஜன் சமாஜ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் டெல்லியில் இருந்து வந்திருந்த மாநில ஒருங்கிணைப்பாளர்களான ராஜாராம் மற்றும் ராம்ஜி கெளதம் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். அந்த கூட்டத்தின்போது பொற்கொடி தனது ஆதரவாளர்களை திரட்டி மாநில தலைவர் ஆனந்தன் தனக்கு எதிராக செயல்படுவதாகவும், காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாகவும் கட்சியின் மேலிட பிரதிநிதிகளுடன் புகார் அளித்தார்.

இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் நினைவிடம் நோக்கி நடைபயணம்.. அனுமதி கோரிய மனு மீது பதிலளிக்க ஆவடி கமிஷனருக்கு உத்தரவு..!
மாநில ஒருங்கிணைப்பாளர் தங்கியிருந்த ஓட்டலுக்குச் சென்ற பொற்கொடி, கட்சிக்காக பாடுபட்டு உழைத்தவர் எனது கணவர் ஆம்ஸ்ட்ராங், அவருடன் உடன் இருந்து பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து கட்சியை வளர்த்தவர்கள் எல்லாம் இன்று தினம் கட்சியில் நீக்கப்பட்டிருக்கார்கள். எனவே மாநில தலைவராக இருக்கக்கூடிய ஆனந்தை கட்சியில் நீக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பியதோடு, புகார் மனுவும் அளித்தது பரபரப்பைக் கிளப்பியது.
இந்த உட்கட்சி பூசல்களுக்கு இடையே பொற்கொடி இனி கட்சி பணிகளில் ஈடுபட மாட்டார் என்று பகுஜன் சமாஜ் கட்சி அறிவித்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மத்திய ஒருங்கிணைப்பாளரான முன்னாள் எம்பி ராஜாராம் என்பவரது பெயரில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'அந்த என்கவுண்டர்... ஆம்ஸ்ட்ராங் கொலையில் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு..?' - சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு