தமிழ்த் திரைப்படங்களில் தவிர்க்க முடியாத இரண்டு அம்சங்கள் உள்ளன. ஒன்று மழைக்காட்சி.. கதாநாயகனோ, கதாநாயகியோ காதல் பாடல்கள் என்றால் மழையில் நனைந்து ஆட வேண்டும்.. இல்லையென்றால் வில்லன் உடன் கதாநாயகன் மழையில் நனைந்து சண்டை போட வேண்டும். அடுத்ததாக மலைக்காட்சி. குறிப்பாக உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாடல் காட்சிகள் படம்பிடிப்பது என்பது தொன்றுதொட்டு நடக்கும் ஒரு பாரம்பரியம்.

ஆனால், கோடைக்காலம் என்பது பொதுமக்களின் விடுமுறைக்காலமும் கூட. இத்தருணத்தில் மலைவாசஸ்தலங்களை நோக்கி மக்கள் படையெடுப்பது வழக்கம். குறிப்பாக ஊட்டி, கொடைக்கானல் ஆகியவை முதல்தேர்வு. இதே கோடையில் தான் அங்கு மலர்க்கண்காட்சி போன்றவையும் நடைபெறும். இவற்றைக் காணவும், கோடையில் இருந்து தப்பித்து சற்றே குளிரை அனுபவிக்கவும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இக்காலகட்டத்தில் நீலகிரிக்கு செல்வார்கள்.
இதையும் படிங்க: மே 16-ல் தொடங்குகிறது ஊட்டி மலர் கண்காட்சி.. ஆட்சியர் அறிவிப்பு..!
இதனைக் கருத்தில் கொண்டு நீலகிரியில் உள்ள சுற்றுலாத் தலங்களில் நாளை முதல் 3 மாதங்களுக்கு சினிமா படப்பிடிப்புகளுக்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தேயிலை பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா உள்ளிட்ட தோட்டகலைத்துறைக்கு சொந்தமான 7 இடங்களில் படப்பிடிப்புகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ஏனெனில் மலர்க்கண்காட்சி, பழக்கண்காட்சி, ரோஜா கண்காட்சி, காய்கறி கண்காட்சி ஆகிய இடங்களில் தான் அதிக அளவு மக்கள் கூடுவார்கள். இங்கு படபிடிப்பு நடத்தும்போது அவர்களுக்கும் இன்னல், படபிடிப்பும் முழுமையாக நடத்த முடியாத சூழல் ஏற்படும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், ஒரே சமயத்தில் லட்சக்கணக்கானோர் மலையில் குவியும்போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். ஒருவேளை இந்தமாதிரியான சந்தர்ப்பத்தில் படபிடிப்புக்கு அனுமதி அளித்தால் அவற்றைக் காணவும் பொதுமக்கள் ஆங்காங்கே நின்றுவிடுவதற்கான வாய்ப்பும் உள்ளது. இதனால் போக்குவரத்து நெரில் அதிகரிக்குமே தவிர, குறைய வாய்ப்பில்லை.

இப்படி பல காரணிகளை அடிப்படையாகக் கொண்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களில் வருகிற ஜுன் மாதம் 5-ந் தேதி வரை படபிடிப்புகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மகளிர் பெயரிலான பத்திரப்பதிவு..! கட்டண குறைப்பு திட்டம் நாளை முதல் அமலாகிறது..!