உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ் நாட்டிற்கு வரும் போதெல்லாம் அவரது புகைப்படத்திற்கு பதிலாக நடிகர் சந்தான பாரதியின் புகைப்படத்தை பயன்படுத்தி போஸ்டர் அடித்து ஒட்டி வருகின்றனர் பாஜகவினர். கடந்த ஆண்டு 12.4.2024 அன்று அமித் ஷா தமிழகம் வந்தபோது, ''மீண்டும் மோடி வேண்டும் மோடி. தமிழகம் வருகைதரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களே வருக வருக'' என நடிகர் சந்தான பாரதியின் புகைப்படத்தை பயன்படுத்தி போஸ்டர் அடித்து ஒட்டி இருந்தனர்... அப்போதே இது கேலிக்குள்ளாகியது.

அந்தக் கொடுமை ஓய்வதற்குள் இன்று ராணிப்பேட்டைக்கு வந்துள்ளார் உள்துறை அமைச்சர் அமித் ஷா. இப்போதும் அமித் ஷாவுக்கு பதிலாக நடிகர் சந்தான பாரதியின் புகைப்படத்தை பயன்படுத்தி வரவேற்பு போஸ்டர் அடித்து பாஜகவினர் வரவேற்றுள்ளனர். அந்தப்போஸ்டரில் ''ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு வருகைதரும் இந்தியாவின் இரும்பு மனிதரே! வாழும் வரலாறே.. வருக.. வருக..!'' என போஸ்டரில் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. அதிலும் குறிப்பாக இந்த போஸ்டரை அடித்தது சாதாரண பாஜக தொண்டனோ, ஆதரவாளரோ இல்லை. மாநில செயற்குழு உறுப்பினரான அருள்மொழி இந்த போஸ்டரை அடித்து ஒட்டியுள்ளார் என்பதுதான் காலக் கொடுமை.
இதையும் படிங்க: தமிழுக்கே முக்கியத்துவம்..! மு.க.ஸ்டாலினின் குற்றச்சாட்டுகளை தூள் தூளாக்கிய அமித் ஷா..!

இந்தப்போஸ்டரை பகிர்ந்து பலரும் 'அமித் ஷாவுக்கும், நடிகர் சந்தான பாரதிக்கும் வித்தியாசம் தெரியாத இவர்களை எல்லாம் கட்சியில் வைத்துக் கொண்டு என்ன செய்ய? நடிகர் சந்தான பாரதியை இரும்பு மனிதர் ஆக்கிய கரும்பு உள்ளம் கொண்ட சங்கிகளுக்கு வாழ்த்துகள்! என கலாய்த்து வருகின்றனர்.
இதுகுறித்து நடிகர் சந்தான பாாரதியிடமே நேரடியாகக் கேட்டோம். அவர், '' என்னது இப்போதுமா? என ஆச்சர்யத்துடன் கேட்டவர், அடுத்து தொடர்ந்தார். ''ஒருமுறை நான் ஏதோ சூட்டிங் போய்விட்டு திருச்சி ஏர்போர்ட்டுக்கு வந்தேன். அப்போது அங்கிருந்த வட மாநிலத்தை சேர்ந்த செக்யூரிட்டிகள் என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டே ஏதோ அவர்களுக்குள் பேசிக் கொண்டிருந்தார்கள்.

நான் அவர்களிடம் போய், ''எதற்கு என்னைப் பார்த்து சிரிக்கிறீர்கள்?'' என்று ஆங்கிலத்தில் கேட்டேன். ''உங்கள் உருவம் அமித் ஷா போலவே இருக்கிறது'' எனச் சொன்னார்கள். நான் ஏதோ அமித்ஷா ஹிந்தி நடிகர் போல. அதனால் சிரிக்கிறார்கள் என நினைத்துக் கொண்டேன். அதன் பிறகுதான் அமித்ஷா என்பவர் பாஜகவில் பெரிய ஆள் என்பதை தெரிந்து கொண்டேன்.

பிறகு சில நாட்கள் கழித்து ஒரு போஸ்டர் பார்த்தேன். அதில் ''அமித் ஷா அவர்களே வருக வருக'' என எனது புகைப்படத்தை போட்டுள்ளார்கள். என்னடா இது கொடுமை என ஆச்சரியப்பட்டேன். அமித்ஷாவிற்கு பதிலாக என் ஃபோட்டோவை போட்டிருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு அந்த அளவுக்கு தான் அறிவு இருக்கிறது என அர்த்தம்'' என தலையிலடித்துக் கொண்டார்.

அமித்ஷாக்கு பதில் சந்தானபாரதி போஸ்டர் ஒட்டப்பட்ட விவகாரத்தில் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் அருள்மொழி விளக்கம் அளித்துள்ளார். ''அந்த போஸ்டருக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதை நான் ஒட்டவில்லை. என் பெயரை தவறாக பயன்படுத்தி உள்ளனர். இதனால் அதிக மன உளைச்சலுக்கு உள்ளாகி இருக்கிறேன். காவல்துறையை அணுகி புகார் கொடுக்க இருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழர்கள் முட்டாள்களா..? அமித்ஷா...! தெறிக்கவிட்ட ப.சிதம்பரம்..!