தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு பதிலாக புதிய தலைவர் நியமனம் செய்யப்பட உள்ளது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. பாஜக மாநில தலைவருக்கான போட்டியில் நயினார் நாகேந்திரன், கருப்பு முருகானந்தம், வானதி சீனிவாசன் உள்ளிட்டவர்கள் இருப்பதாக விவாதங்கள் நடந்தன.
இந்நிலையில், மாநில தலைவருக்கான போட்டியில் தான் இல்லை என்று வெளிப்படையாக கூறியுள்ளார் அண்ணாமலை. தமிழக பாஜகவின் அடுத்த தலைவராக யார் நியமிக்கப்பட உள்ளார் என்பது குறித்த பாஜக முக்கிய நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். ''அண்ணாமலையை பதவியை விட்டு நீக்கக்கூடாது என்று அவரது ஆதரவாளர்கள் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். பாஜகவில் தொண்டர்கள் எண்ணப்படி முடிவு செய்ய மாட்டார்கள். பாஜக தேசிய தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டுதான் ஆக வேண்டும்.

டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, அண்ணாமலை சந்தித்து பேசியுள்ளார். அப்போது அமித்ஷா அவரை பதவியில் இருந்து விலகிக்கொள்ள கேட்டுக்கொண்டுள்ளார். அப்போது தமிழ்நாட்டில் கட்சியை வளர்க்க தான் மேற்கொண்ட நடவடிக்கைகளை அண்ணாமலை எடுத்துக்கூறியுள்ளார். திமுகவை எதிர்த்து பல விஷயங்களை செய்திருக்கிறேன். இனி அவர்கள் நெருக்கடி கொடுத்து தன்னை காலி செய்ய பார்ப்பார்கள் என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: எல்லாமே திமுகவோட தப்பு தான்..! காவல்துறை பணியிட விவகாரத்தில் அண்ணாமலை ஆவேசம்..!
அதே நேரத்தில் கட்சியில் உள்ளவர்கள் சரியான நபர்கள் கிடையாது. நயினார் நாகேந்திரன், திமுகவைவிட மோசமானவர். அவர் தற்போதே 6 டாஸ்மாக் பார்களை நடத்துகிறார். பாஜக மாநில தலைவர் பொறுப்பு அவருக்கு கொடுத்தால் 60 பார்கள் நடத்த தொடங்கி விடுவார். அதனால் நயினாருக்கு மாநில தலைவர் பொறுப்பு தரக்கூடாது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழிசை ரிட்டையர்டு ஆகிவிட்டார். வயதான அவரை போட்டால் கட்சியில் வேலைக்கு ஆகாது. வானதி சீனிவாசன், சொகுசான நபர். அவர் தமிழிசை போன்று களத்தில் இறங்கி போராட மாட்டார். பதவியையும் அவர் எதிர்பார்க்க மாட்டார். ஆகையில் இந்த மூன்று பேரும், பாஜக மாநில தலைவருக்கான போட்டியில் கிடையாது. வானதியும், தமிழிசையும் பதவிக்கு நிச்சயம் வர மாட்டார்கள். நயினார் நாகேந்திரன் வருவதற்கு 90 சதவீதம் வாய்ப்பு இல்லை.
தமிழக பாஜக தலைவராக ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்த ஒருவர் தான் வரப் போகிறார். சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்புவிடம் பாஜக தலைவர் பதவிக்கு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. ஆனால், அவர் முதலமைச்சர் வேட்பாளராக மட்டுமே ஆசைப்படுகிறார். ஆகையால் மாநில தலைவர் பொறுப்பு வேண்டாம் என்று சொல்லிவிட்டார். அவர் தனக்கு நெருக்கமான ஆனந்தன் அய்யாசாமி என்ற நபரை, பாஜக மாநில தலைவராக நியமிக்க திட்டமிட்டு இருந்தார்.

ஆனால் அண்ணாமலை ஆனந்தன் அய்யாசாமியை, மாவட்ட தலைவராக ஆக்கிவிட்டார். இனி அவரை மாநில தலைவராக ஆக்க மாட்டார்கள். இதன் காரணமாக தென் மாவட்டங்களில் உள்ள மற்ற 2 சமுதாயங்களை சேர்ந்தவர்களை சேர்ந்த 2 பேரில் ஒருவர் தான் வர வாய்ப்பு உள்ளது.
அதுவும் ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர்தான் வருவார். பிராமண லாபி பிராமணர்களை மாநில தலைவர் கொண்டுவர வேண்டும் என கேட்டபோது, முதலமைச்சர் பதவியை அந்த சமுதாயத்திற்கு வழங்குவதாக கூறி அமைதிபடுத்தியுள்ளனர்.
அதிமுகவில் இருந்து சசிகலா, தினகரன் போன்றோரை வெளியேற்றியது பாஜகதான் என்பதால், அந்த கட்சியின் மீது தென் மாவட்டங்களில் உள்ள முக்குலத்தோர் சமுதாயத்தினர் அதிருப்தியில் உள்ளனர். தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவால், திமுகவை வீழ்த்த முடியாது என்பது பாஜகவுக்கு புரிந்துவிட்டது. இதனால் அந்த கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, ஓபிஎஸ், தினகரன் உள்ளிட்டோரை மீண்டும் கட்சியில் இணைக்க பாஜக முடிவு செய்துவிட்டது.

அதனால் ஒன்றுபட்ட அதிமுகவை உருவாக்குவதற்கான முயற்சிகளில் பாஜக ஈடுபட்டு வருகிறது. தமிழ்நாட்டு நிலவரப்படி மாநில தலைவர் பொறுப்பை நயினார் நாகேந்திரனிடம் கொடுத்தால் அவர் சிறப்பாக செயல்படுவார் என்று ஒரு தரப்பு சொல்லி வருகிறது. ஆனால் அவரது மைனஸ் எல்லாவற்றையும் அண்ணாமலை டெல்லியிடம் போய் சொல்லியுள்ளார்.
டெல்லியில் உள்ள ஆர்எஸ்எஸ் அல்லாதவர்கள், நயினாரை கொண்டுவந்து விட்டால் முக்குலத்தோர் சமுதாய வாக்குகளை பெறலாம் என எண்ணுகிறார்கள். ஆனால் நயினார் நாகேந்திரன் மீது ஏகப்பட்ட குற்றச் சாட்டுகள் டெல்லியில் உள்ளன. அவரை தலைவராக நியமித்தால், அவர் சார்ந்த சமுதாயத்தினரே வாக்களிக்க மாட்டார்கள் என்று சொல்கிறார்கள். எனவே அதை பேலன்ஸ் செய்வதற்கு அதிமுகவை உள்ளே கொண்டுவந்து தினகரனையும், சசிகலாவையும் கட்சிக்குள் கொண்டுவரவும், பாஜகவுக்கு ஆர்.எஸ்.எஸ் சார்ந்த ஒருவரை கொண்டுவரவும் திட்டமிட்டிருக்கிறார்கள்.

அப்படி அவர்களை கொண்டு வந்துவிட்டால் கூட்டணியில் அனைத்து தரப்பினரும் இருப்பார்கள். எனவே ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்த ஒரு நபரை தான் தமிழக பாஜக தலைவராக கொண்டுவர உள்ளனர். யாருமே எதிர்பார்த்திராத ஒரு நபராக அவர் இருப்பார்'' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இந்திய சினிமாவின் அடையாளம் அவர்..! மறைந்த ஹிந்தி நடிகர் மனோஜ் குமாருக்கு பிரதமர் மோடி இரங்கல்..!