முன்னாள் MP யும், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் மகனுமான ஒ.பி ரவீந்திரநாத், செல்வி ஜெயலலிதாவின் புகைப்படம் முன்பாக அமர்ந்து கொண்டே அவரைக் கும்பிடும் படம் ஒன்று வெளியாகி சர்ச்சையை கிளப்பி உள்ளது.
முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்தில் அவரது உருவப்படத்திற்கு அலங்காரம் செய்து அவருக்கு மரியாதை செலுத்தினர்.

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் ஒய்.ஜி மகேந்திரன் குடும்பத்தினர் என பல பிரபலங்கள் வேதா இல்லத்திற்கு சென்று மறைந்த ஜெயலலிதாவின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சிக்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா மற்றும் அவரது கணவர் மாதவன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
இதையும் படிங்க: ரஜினிகாந்த் சொன்ன ஜெயலலிதாவுடனான அந்த 3 சந்திப்புகள் என்னென்ன?... பில்லா ஹீரோயின் ஜெயலலிதாவா?
ஜெ தீபா தனக்கு நெருக்கமான நபர்களை ஜெயலலிதா உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தார் அந்த வகையில் கலந்து கொண்டதாக நடிகர் ரஜினிகாந்த் மற்றும் பலர் தெரிவித்திருந்தனர்.
இதேபோன்றுதான் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் முன்னாள் எம்பி ரவீந்திரநாத் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் ஜெயலலிதாவின் இல்லத்திற்குள் சென்று சுற்றி பார்த்துவிட்டு ஜெ தீபாவின் மகள் கார்த்திகாவை கொஞ்சினார்.

பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் படத்திற்கு மரியாதை செலுத்தி மாலை அணிவித்தார். அவர் அமர்ந்திருந்த அறையின் ஒரு பகுதியில் ஜெயலலிதா எப்போதும் அமர பயன்படுத்தும் நாற்காலியில் அவருடைய இளமை கால படத்தை தீபா வைத்திருந்தார். அதை பார்த்து ஓ.பி ரவீந்திரநாத் அந்த படத்திற்கு அருகில் சென்று அமர்ந்து கொண்டே ஜெயலலிதாவை வணங்கும் காட்சி போட்டோவாக வெளியாகி உள்ளது.
இந்த புகைப்படத்தை பார்த்த எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள், அம்மா ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் இப்படி அருகருகே அமர்ந்து கொண்டு வணங்க முடியுமா? என ரவீந்திரநாத்தை நோக்கி கேள்வி எழுப்பி உள்ளனர்.
இதையும் படிங்க: ஜெயலலிதா உடன் பேச வாய்ப்பு கிடைத்தது எனது பாக்கியம்..! அதிர வைத்த மோடியின் திடீர் அறிக்கை..!