தவெக தலைவர் விஜய் ஸ்டைலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி தாறுமாறு வைரலாகி வருகிறது.
2020ம் ஆண்டு மாஸ்டர் பட ஷூட்டிங்கின் போது நடிகர் விஜய்யின் வீடு, பைனான்சியர் அன்பு செல்வனின் வீடு உள்ளிட்ட இடங்களில் ரெய்டு நடந்தது. இதையடுத்து விஜயிடம் விசாரணை நடத்த வருமான வரித் துறை அதிகாரிகள் முற்பட்டனர். மாஸ்டர் படத்திற்கு முன்பு அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் திரைப்படம் வசூலில் பிரம்மாண்ட சாதனை படைத்தது. இதனையடுத்து அந்த படத்திற்கு விஜய் வாங்கிய சம்பளம் குறித்தும், வரவு செலவு கணக்கு தொடர்பாகவும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதனையடுத்து நடிகர் விஜய், அவரது மனைவி சங்கீதாவிடமும் 24 மணி நேர விசாரணை நடத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இதனிடையே நெய்வேலியில் ஷூட்டிங்கில் பங்கேற்ற விஜய்க்கு எதிராக பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த செய்தி காட்டுத்தீயாக பரவியது. வருமான வரித்துறை சோதனை மற்றும் பாஜக ஆர்ப்பாட்டம் என சர்ச்சைகளுக்குப் பிறகு விஜய் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளதால், அவரைக் காணத் தினமும் பெரும் திரளான ரசிகர்கள் கூடினர். நெய்வேலி சுரங்கத்தில் படப்பிடிப்பை முடித்துவிட்டு விஜய் வெளியே வரும்போது அவர்களைப் பார்த்துக் கையசைத்ததோடு, அங்கிருந்த ஷூட்டிங் வேன் மீது ஏறி நின்று ஆயிரக்கணக்கான ரசிகர்களுடன் செஃல்பி ஒன்றையும் எடுத்துக் கொண்டார். மாஸ்டர் செல்ஃபி என அழைக்கப்பட்ட இது, 2020 ஆம் ஆண்டில் அதிகம் ரீட்வீட் செய்யப்பட்ட பிரபல ட்வீட்களில் ஒன்றாக இருந்தது.
இதையும் படிங்க: ரூ.12 லட்சம் வருமான வரி விலக்கு பெஸ்ட்....!! மற்றதெல்லாம் வேஸ்ட்..! த.வெ.க தலைவர் விஜய் அதிரடி

சொல்லப்போனால் இந்த செஃல்பி தான் விஜயின் அரசியலுக்கு ஆரம்ப பிள்ளையார் சுழி என்றுகூட சொல்லலாம். இதனையடுத்தே விஜய் கட்சி ஆரம்பிக்க உள்ளதாகவும், அரசியலில் குதிக்க உள்ளதாகவும் செய்திகள் பரபரப்பாகின. தற்போது கட்சி ஆரம்பித்து அரசியல் களத்திலும் விஜய் தீவிரமாக இறங்கி வருகிறார். இருப்பினும், நேற்று வந்தவர்கள் எல்லாம் ஆட்சி அமைக்க ஆசைப்படுகிறார்கள் என அதிமுக, திமுக என இரண்டு கட்சிகளுமே விஜயை விமர்சித்து வருகின்றன. குறிப்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே இந்த கருத்தை தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது இளைஞர்களைக் கவர்வதற்காக விஜய் டெக்னிக்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் கையில் எடுத்துள்ளது பேசு பொருளாகியுள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நடைபெற்ற பாரத சாரண - சாரணியர் இயக்கத்தின் வைர விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது மேடையில் இருந்த படியே ஒட்டுமொத்த சாரண, சாரணியர் இயக்க மாணவர்களையும் கவர் செய்யும் வகையில் பிரம்மாண்ட செஃல்பி ஒன்றை முதல்வரே எடுத்திருக்கிறார். முதல்வர் மு.க.ஸ்டாலினின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள இப்புகைப்படம் சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வருகிறது. லேட்டஸ்ட் தலைமுறையின் ட்ரெண்டிற்கு ஏற்ற வகையில் முதல்வர் எடுத்த இந்த செல்ஃபி இளைஞர்களைக் கவர்ந்து வருகிறது.
இதையும் படிங்க: அந்த விஷயத்துல விசிகவும், தவெகவும் ஒன்னுதான்... ஆதவ் சொன்னதை ஆமோதித்த திருமா!