ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட பாம்பன் ரெயில் பாலம் 110 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், கடல் அரிப்பின் காரணமாக பாலத்தின் பல இடங்களில் உறுதித்தன்மை குறைந்தது. இதனால், கப்பல் போக்குவரத்துக்காக பயன்படும் 'தூக்கு பாலத்தில்' அவ்வப்போது பழுது ஏற்பட்டு வந்தது. எனவே, பாதுகாப்பு கருதி இப்பாலத்தில் 2022ஆம் ஆண்டு டிசம்பர் 22ஆம் தேதியுடன் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. பின்னர், பழைய பாம்பன் ரெயில் பாலம் அருகே புதிய ரெயில் பாலம் கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கியது.

இதையடுத்து ரூ.550 கோடி மதிப்பீட்டில் புதிய ரயில் பாலம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கியது. 2 ஆயிரத்து 78 மீட்டர் நீளத்திற்கு (2.1 கிலோ மீட்டர் தூரம்) கட்டப்பட்டு வந்த பாலத்தின் பணிகள் முடிந்து, பாலத்தில் ரயில் சோதனை ஓட்டமும் நடைபெற்றது. இந்நிலையில் புதிய பாம்பன் ரயில் பாலத்தை ஏப்ரல் 6 அன்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்க இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்தது. இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இதையும் படிங்க: பிரதமர் மோடி 3 திட்டங்களுடன் ஏப்ரல் 6-ல் தமிழகம் வருகை.. அதிமுகவுடன் கூட்டணி பேச்சில் முக்கிய முடிவு..!
இதற்கிடையே பாம்பன் ரயில் பாலத்துக்கு குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் பெயர் சூட்ட வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை வைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி ஏப்.6 அன்று திறக்க உள்ளார். பாம்பன் பாலம் வரலாற்று சிறப்புமிக்க பாலம்.

எனவே, இந்தப் பாம்பன் பாலத்துக்கு ராமேஸ்வரத்தை பூர்வீகமாக கொண்டு பிறந்து, வளர்ந்து ராமேஸ்வரத்துக்கு ஓர் அடையாளமாக இருக்கும் குடியரசு முன்னாள் தலைவர் ஏபிஜெ.அப்துல்கலாம் பெயரை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று தேமுதிக சார்பாக மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் கோரிக்கை வைக்கிறேன்.
பிரதமர் பாலத்தை திறக்க வரும்போது அப்துல் கலாம் பெயரைச் சூட்டி முஸ்லிம்களுக்கும், ராமேசுவரத்துக்கும் பாரம்பரியமிக்க நமது பாம்பன் பாலத்துக்கும் பெருமையைச் சேர்க்க வேண்டும். அப்துல் கலாம் பெயரை வைப்பதன் மூலம் மிகப்பெரிய ஒரு கவுரவத்தை இந்த ரம்ஜான் நேரத்தில் முஸ்லிம்களுக்கு அளிக்க முடியும்.” என்று அறிக்கையில் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழக மீனவர்களுக்கு பாவம் செய்த திமுக, காங்கிரஸ்.. ஆளுநர் ஆர்.என். ரவி கடும் விமர்சனம்..!