அண்ணாமலையால் அண்ணா அறிவாலயத்தின் செங்கலை அல்ல ஒரு சிறு புல்லைக்கூட புடுங்க முடியாது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள ஒவ்வொரு செங்கல்லையும் உருவி எடுக்கும் வரை இங்கு தான் இருப்பேன். ஊழல் பெருச்சாளிகள் 35 அமைச்சர்கள் 2026-ல் சிறைக்குச் செல்வதை பார்ப்பதற்கு நான் இருப்பேன். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்” என்று காட்டமாகப் பேசி இருந்தார்.

அண்ணாமலையின் இந்த கருத்து திமுகவினரைக் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூட, கலைஞரின் சிந்தனையிலும் செயலிலும் உருவான கழகத்தின் கற்கோட்டையான அறிவாலயத்திலிருந்து செங்கல்லை உருவலாம் எனக் கனவு காண்பவர்கள் தரையில் விழுந்து தலையில் அடிபட்டபின், கனவு கலைந்து விழித்துக் கொள்ளலாமே தவிர, அறிவாலயத்தின் ஒரு துகளைக் கூட எவராலும் அசைக்க முடியாது எனக்குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க: திமுக அரசுக்கு கடைசி ஓராண்டு... திமுகவினரை வெறுப்பேற்றும் அண்ணாமலை..!

தற்போது அண்ணாமலைக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறுகையில், “அண்ணா அறிவாலைய செங்களை அகற்றுவேன் என்று அண்ணாமலையின் பேச்சு இதைப்போல முட்டாள்தனமான பேச்சு இருக்க முடியாது.
எங்களைத் தொடக்கூட முடியாது. அண்ணா அறிவாலயத்தில் நுழைய கூட முடியாது. அண்ணா அறிவாலயம் சட்டப்படி முறைப்படி நன்றாக கட்டப்பட்டுள்ளது. அனுமதி பெற்று கட்டப்பட்டுள்ளது அண்ணாமலை அல்ல அவரது தாத்தாவே வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது. இது அவருக்கும் நன்றாக தெரியும். அங்குள்ள செங்களை அல்ல சிறுபில்லை கூட புடுங்குவதற்கு வாய்ப்பு கிடையாது. நாங்கள் அனுமதித்தால் தான் அவர் உள்ளே வர முடியும் என்றார்.

அதேபோல் மணப்பாறை இரட்டை கொலை வழக்கில் அண்ணாமலையின் கருத்திற்கு பதிலளித்த அவர், “மயிலாடுதுறை சம்பவத்தில் யார் உண்மையான குற்றவாளியோ அவர்களை பிடித்து நாங்கள் கைது செய்கின்றோம். எந்த சூழ்நிலையிலும் தவறான நபர்கள் கைது செய்துவிடக்கூடாது என்பதுதான் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவு. அண்ணாமலை சொல்வதற்கெல்லாம் நாங்கள் ஆட முடியாது. ஒரு சம்பவம் நடப்பது என்பது இயற்கை அதனை நாங்கள் தடுக்க முடியாது. ஆனால் ஒரு சம்பவம் நடந்த பிறகு அந்த குற்ற செயலில் ஈடுபடுபவர்களை நாங்கள் கண்டுபிடிக்கிறோமா இல்லையா என்பது தான் முக்கியம். இந்த சம்பவத்தில் குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடித்துள்ளோம். இதன் பிறகு நீதிமன்றத்தில் அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றத்தை நாங்கள் நிரூபிப்போம்” என்றார்.
இதையும் படிங்க: அறிவாலயத்தின் துகளைக்கூட அசைக்க முடியாது... அண்ணாமலைக்கு முதல்வர் ஸ்டாலின் ஆவேச பதிலடி.!