தமிழகத்துக்கு நிதி வழங்குவதில் பாரபட்சம் இருப்பதாக திமுகவினர் குற்றம் சாட்டுவது பற்றி சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார். "இங்கே (தமிழகம்) ஒரு வாதம் தொடர்ந்து வைக்கப்படுகிறது. நாங்க நிறைய தருகிறோம், அதனால் நிறைய கொடுக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். இதுபோன்ற வாதங்களைப் பேசுவதே முதலில் தவறு. இந்தக் கணக்கீடுகள் எப்படி வருகிறது என்றும் தெரியவில்லை.

இதை கொஞ்சம் ஏளனமாக சொல்ல வேண்டும் என்றால், தமிழ் நாட்டுக்கு சென்னையும் கோவையும்தான் அதிக வரி கொடுக்கிறது. இப்போது அரியலூர், கோவில்பட்டியில் இருப்பவர்கள் எங்களுக்கு ஏதாவது செய்யுங்கள் என்று கேட்கிறார்கள். அதற்கு சென்னைக்காரர்களும் கோவைக்காரர்களும் நாங்கள்தான் அதிக வரி கொடுக்கிறோம், அதனால் எங்களுக்குத்தான் எல்லாம். கோவில்பட்டிக்கு எதுவும் செய்ய முடியாது என்று சொல்ல முடியுமா? பாரத நாட்டில் இதுபோன்ற பாலிசி கிடையாது. எனவே, இதுபோன்று குதர்க்கமாகப் பேசுவது கூடாது" என்று நிர்மலா சீதாராமன் பேசினார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் இந்தப் பேச்சுக்கு திமுக எம்.பி. கனிமொழி எதிர்வினையாற்றியுள்ளார். இதுதொடர்பாக அவர் சோஷியல் மீடியாவில் வெளியிட்டுள்ள பதிவில்,"நீங்கள் தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் ஏளனம் செய்வதைத்தான் இத்தனை காலமாய் எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறோம். வரலாற்றில் தமிழ் மக்களை பழித்தவர்களின் நிலை என்ன என்பதை அம்மையார் நிர்மலா சீதாராமன் ஒரு நிமிடம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

தமிழுக்காகவும், எங்களது உரிமைகளுக்காகவும் போராடுவது உங்களுக்கு ஏளனத்திற்கு உரியதாக தோன்றுகிறதா? தமிழர்களை எள்ளி நகையாடும் உங்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் மறுபடியும் விரைவில் தக்க பாடம் புகட்டுவார்கள்!" என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஊழலை மறைக்க தொகுதி மறுவரையறையைப் பூதாகரமாக்கும் திமுக... மு.க.ஸ்டாலினை விளாசி தள்ளிய நிர்மலா சீதாராமன்.!!
இதையும் படிங்க: திமுக அரசின் பட்ஜெட் ஹிட்டா.? அட்டர் ஃபிளாப், சிம்ப்ளி வேஸ்ட்.. திமுக அரசை பஞ்சராக்கிய இபிஎஸ்.!