துபாயில் நடைபெற்று வரும் கார் பந்தயத்தில் அஜித் இனி கார் ஓட்ட மாட்டார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித், “அஜித்குமார் ரேஸிங்” என்ற பெயரில் கார் ரேஸ் நிறுவனம் ஒன்றைத் தொடங்கியுள்ளார். இதன் சார்பாக துபாயில் நடைபெற்று வரும் கார் ரேஸில் அஜித்குமார் மற்றும் அவரது அணியினர் பங்கேற்கவிருந்தனர். இந்நிலையில், துபாயில் நடக்கவிருக்கு ரேஸில் கார் ஓட்டுவதில் இருந்து அஜித்குமார் விலகியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அஜித் கார் விபத்து:
ஜனவரி 7ம் தேதி, துபாய் 24H தொடருக்கான கார் ரேஸ் பயிற்சியின் போது நடிகர் அஜித் ஓட்டிய கார் விபத்துக்குள்ளானது. மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த ரேஸ் கார், வேகமாக ஓடி பக்கவாட்டு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. மோதிய வேகத்தில் கார் இரண்டு, மூன்று முறை வேகமாக சுழன்று நின்றது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஆனால் இந்த விபத்தில் அஜித் குமாருக்கு சிறு கீறல்கள் கூட ஏற்படவில்லை என்றும், அவர் பூரண நலத்துடன் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே அஜித்திற்கு ஏற்பட்ட இந்த விபத்து தொடர்பாக கடந்த 2 நாட்களாக ரேசிங்கின் மையக்குழு ஆய்வு செய்துள்ளது. இந்த போட்டி 24 மணி நேரம் நடக்கக்கூடிய கடினமான சுற்றுக்களை கொண்டது என்பதால் அஜித்தை இந்த போட்டியில் இருந்து விலகும் படி ஆலோசனை வழங்கியுள்ளது. எனவே அணியின் உரிமையாளரார் என்ற முறையிலும், தனது உடல் நலம் மற்றும் அணிகளின் ஒட்டுமொத்த வெற்றி ஆகியவை முதன்மையான முன்னுரிமைகளைக் கருத்தில் கொண்டு போட்டியில் இருந்து விலகுவதாக அஜித் அறிவித்துள்ளார்.
திடீர் முடிவுக்கு காரணம் என்ன?
தொழில்முறை மற்றும் தனிப்பட்ட லட்சியங்களை விட அணியின் நலன்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்காக அஜித்குமார் தாமாகவே முன்வந்து இந்த முடிவை எடுத்துள்ளார். உண்மையான விளையாட்டுத் திறனை எடுத்துக்காட்டும் இத்தகைய நடவடிக்கைகள், அவரது அணிகள் மற்றும் ரசிகர்களுக்கு ஒரு நீடித்த உத்வேகமாக அமைந்துள்ளது.

அதேநேரத்தில் துபாயில் நடக்கவுள்ள , “போர்ஷே கேமன் GT4” பந்தையத்தில் அஜித்குமார் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியின் மூலம் 15 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக நடிகர் அஜித் கார் ரேஸில் களமிறங்கவுள்ளார். சர்வதேச அளவிலான போட்டியில் நடிகர் அஜித் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும்.